நீத்தார் பெருமை – 25

திருக்குறள்  – இல்லறவியல் – நீத்தார் பெருமை – குறள் 25

‘ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி’

இந்தக் குறளுக்கு பல விளக்கங்கள் தந்திருக்கிறார்கள் நம் சான்றோர்கள்.

அதிலிருந்து புரிவது

‘புலன்களில் செல்கின்ற அவா ஐந்தினையும் அடக்கிவனுடைய வல்லமைக்கு அகன்ற வானுலகத்தின் தலைவானாகிய இந்திரனே தகுந்த சான்று ஆவான்.’

ஒருவன் தன் ஐம்புலன்களை அடக்குவதற்கும் இந்திரனுக்கும் என்ன சம்பந்தம். இந்திரன் எப்படி இதற்கு சான்றாகமுடியும்  என்ற கேள்விகள் எழுகிறது. ஏன் வள்ளுவர் இப்படி சொல்லவேண்டும்?

இந்திரன் என்பது வானுலகில் இருக்கும் ஒருவர் அல்ல. இந்திரன் என்பது வேறொன்றும் அல்ல… நம் மனமே. ஆம் நம் மனம் தான் இந்திரன். நம் மனதின் தலைவன் என்றும் இந்திரனைச் சொல்லலாம். இதன் அடிப்படையில் நம் ஐம்புலன்களை இந்திரியங்கள் என்றும் சொல்லுவதுண்டு.

நம் உடலில் உள்ள கண், செவி, மூக்கு, வாய், உடல் (மெய்) என்னும் ஐந்து கருவிகள் வழியாக உணரும் ஐந்து உணர்வுகளையும் அனுபவிப்பது நம் மனம். உதாரணமாக நம் செவியின் மூலம் நாம் கேட்கும் ஒரு இனிமையான பாடலை நம் மனம் தான் அனுபவிக்கிறது, நம் செவி அல்ல. செவி வெறும் ஒலியை வாங்கிக்கொள்ளும் ஒரு கருவியே. அதுபோல நம் கண்கள் மூலம் நாம் பார்க்கும் ஒரு அழகிய காட்சியை நம் மனம் உணர்ந்து அனுபவிக்கிறது. நம் கண்கள் வெறும் ஒளியை பெற்றுக்கொள்ளும் ஒரு கருவியே. இதுபோன்று தான் மற்ற புலன்களும். இந்தக் கருவிகளின் மூலம் அனைத்தையும் அனுபவிப்பது நம் மனமே.

நம் ஒவ்வொருவரின் உயிரின் குறிக்கோள் முக்தியே. இறையோடு ஒன்று கலப்பதே. எங்கிருந்து வந்ததோ அந்த மூலத்தை அடைவதே. இதற்கு உள் நோக்கிய பயணம் தேவை. அதாவது வெளிஉலகில் நம் கவனம் செல்லாமல் நம்முள் செல்லவேண்டும். இதற்கு தியானம் உதவும்.  ஐந்து புலன்களின் மூலம் வரும் ஐந்து ஆசைகளையும் அடக்கி, அவா அறுத்து உள்நோக்கிச் செல்லவேண்டும்.

நம்மால் பயனடைபவர்கள் தானே நாம் செய்யும் உதவிக்கு சான்றாக நிற்பார்கள்?  அதுபோல தான் நாம் ஐம்புலன்களை அடக்கினால், நம் ஐம்பொறிகளால் பெரிதும் பயன் அடையும் நம் மனமும் அதற்குச் சான்றாக நிற்கும். மனம் என்றால் இந்திரன் என்பதால் ஐந்து ஆசைகளை அடக்கியவருக்கு இந்திரனே சான்று ஆவான் என்றார் வள்ளுவர்.

நம் உடலுக்கு உயரம், அகலம் என்று அளவிடமுடியும். ஆனால் நம் மனம் அகன்ற வானம் போன்றது. நம்மால் எவ்வளுவு வேண்டுமானாலும் நம் மனதை பெரிதுபடுத்த முடியும். ‘அகல்விசும்பு ளார்கோமான்’ அதாவது அகன்ற வானத்தின் தலைவன் என்று வள்ளுவர் சொன்னது இதைவைத்து தான்.