புகழ் – 236

திருக்குறள் – இல்லறவியல் – புகழ் – குறள் 236

‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 

தோன்றலின் தோன்றாமை நன்று’

அறத்துப்பால் -> இல்லறவியல் -> புகழ்

இந்தக் குறளுக்கு பல விளக்கங்கள் தந்திருக்கிறார்கள் நம் சான்றோர்கள்.

அதில் நான் படித்தவை இவை

1.      பிறந்தால் புகழுக்கு ஏதுவான குணத்தோடு பிறக்கவேண்டும். இல்லையேல் பிறக்காமல் இருப்பதே நல்லது.

2.      ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும். அத்தகைய சிறப்பு இல்லாதவன் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமல் இருப்பதே நல்லது.

3.      அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகமாகவேண்டும் என்கிறது ஓர் விளக்கம்.

4.      மேடையில் தோன்றும்போது புகழோடு தோன்றவேண்டும் என்கிறது வேறொரு விளக்கம்.

இந்தக் குறள் அறத்துப்பாலில், இல்லறவியலில் ஈகைக்குப்பின் வரும் புகழ்என்ற கடைசி அத்தியாயம். அதில் வரும் ஆறாவது குறள் இது.

மேலே குறிப்பிட்டுள்ள விளக்கங்களில் 2, 3, 4 ஆவது விளக்கங்களை ஏற்க இயலவில்லை. பொருட்பாலில் இந்தக் குறள் வந்திருக்குமாயின் இந்த விளக்கங்கள் பொருந்தும். அறத்துப்பாலில் வள்ளுவரின் கவனம் இம்மை மறுமை பற்றியும், நம் உயிர் ஆற்றலின் மேல் நோக்கிய பயணத்திற்கு வேண்டியவைப்பற்றிதான் என்பதால் முதல் விளக்கம் கிட்டத்தட்ட சரி என்று ஏற்றுக்கொள்ளலாம்.   இருந்தும் இந்த விளக்கத்தை மட்டும் வைத்து இந்தக் குறள் முழுவதுமாக புரிந்துக்கொள்ள முடியவில்லை.

நாம் இந்தப் பிறவியை எடுத்துவிட்டோம். பிறந்து வளர்ந்து ஆளாகி நிற்கிறோம். பின் எப்படி நம்மிடம் ‘பிறந்தால் புகழோடு பிற, இல்லையென்றால் பிறக்காதே’ என்று வள்ளுவர் சொல்லமுடியும்?

அப்படி என்றால் வள்ளுவர் நம் அடுத்தப் பிறவியைப் பற்றிதான் சொல்கிறார் என்று புரிகிறது. சரி. அடுத்தப் பிறவியில் நாம் ‘புகழோடு’ தோன்ற இன்று என்ன செய்யவேண்டும்? ‘புகழோடு’ எப்படி ஒருவன் பிறக்கமுடியும்? இந்தக் கேள்விகள் எழும். எழுவது நியாமமும் கூட.

இந்தக் குறள் இல்லறவியலில், கடைசி அத்தியாயத்தில் வருகிறது. அதாவது நம் உயிர் ஆற்றல் சுவாதிஷ்டானத்தில் இருக்கையில் நாம் நம் வாழ்க்கைத் துணையைக் கண்டு, மணம் முடித்து, மக்களைப் பெற்று, அன்புகொண்டு, (உயிர் ஆற்றலை மணிப்பூரத்தில் வந்துவிடும்), விருந்தோம்பல் செய்து, செய்நன்றி அறிந்து, கோபம் அடக்கி, பொறுமைக் கற்று, பொறாமை, பேராசை ஆகிய குணங்களை கழிந்து, வறியவருக்குக் கொடுத்து, ஈகை குணம் வளர்த்து பின் புகழடைகிறோம். வள்ளுவர் சொன்னதைப்போல் வரிசையாய் இவைகளைச் செய்ய செய்ய, நம் உயிர் ஆற்றல் மெல்ல மெல்ல மேல் ஏறி அனாகதத்தை எட்டிவிடும். அதாவது இல்லறவியல் முடிந்து துறவறவியலை எட்டிவிட்டோம் என்று பொருள்.

நம் உயிரின் குறிக்கோள் முக்தி அடைந்து பிறவாமல் இறையோடு ஒன்று கலப்பதே. நம் உயிர் ஆற்றல் அனாகதத்தை எட்டிவிட்டால் பாதி கிணற்றைத் தாண்டிவிட்டதைப்போல். ஏழு சக்கரங்களில், மூலாதாரம், சவாதிஷ்ட்டானம், மணிப்பூரகம் ஆகிய மூன்று நிலைகளைத் தாண்டி மத்தியில் இருக்கும் அனாகதத்தை எட்டிவிட்டால் இனி பாதி தூரமே. இந்நிலையில் ஒருவன் இறந்து போனால் அவன் அடுத்தப் பிறவியில் பிறக்கும்போது புகழோடு பிறப்பான் (எந்த நிலையில் முற்பிறப்பை முடித்தானோ). மூலாதாரத்திலிருந்து அவன் உயிர் ஆற்றல் விரைவில் அனாகதத்தைத் தொட்டுவிட முடியும். அந்தக் கர்மவினைகளோடுதான் அவன் பிறப்பான். அதற்குத் தகுந்த சூழ்நிலைகள் அவனுக்கு வந்தமையும். இது அவன் பூர்வ புண்ணியம்.

இருப்பினும் இங்கு நாம் நினைவில் கொள்ளவேண்டியது நாம் புகழோடு தோன்றினாலும் இப்பிறவியிலும் நாம் அறவழி தவறாமல் நடந்தால்தான் நம் உயிர் ஆற்றலை மேலே உயர்த்த முடியும். இல்லையேல் நம் உயிர் ஆற்றல் கீழ் நிலைக்கும் இறங்கக்கூடும்.

குறைந்தப் பட்சம் இப்பிறவியில் உன் உயிர் ஆற்றலை உயர்த்தி அனாகதத்திற்கு அதாவது புகழ் வரைக்குமாவது கொண்டுவந்துவிடு. மீதியை அடுத்தப் பிறவியில் வந்து நீந்திக் கடப்பது சுலபமாகிவிடும் என்பதுதான் வள்ளுவரின் நோக்கம். ஆங்கிலத்தில் ‘divide and conquer’ என்று சொல்லுவதைப் போல.

இதுதான் தோன்றலின் புகழோடு தோன்றுக!