அம்மா அணிலான கதை

“வயிற்றுக்கு சோறிட வேண்டும் – இங்கு
வாழு மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து – இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்”
– பாரதி

அம்மா அணிலான கதை
——————————–

தனி மனித வாழ்வில் தொடங்கி ஒரு நாட்டின் வளர்ச்சி உட்பட அனைத்திற்கும் முதுகெலும்பாய் இருப்பது கல்வியேயாகும்.

“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று பாரதி சொன்னதுப்போல, அன்று தமிழர்கள் கல்வியிற் சிறந்து கலைகள் பல கற்றுத் தேர்ந்திருந்தார்கள்.

பொருட்பாலில் வள்ளுவன் கல்வி, கல்லாமை, கேள்வி என்ற அதிகாரங்களில் கல்வியைப்பற்றி குறித்திருப்பது நாம் அறிந்ததே.

தன் புதிய ஆத்திச்சூடியில், “கல்வியதை விடேல்” என்றும் “கற்ற தொழுகு” என்றும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கல்வியின் சிறப்பை பாடினான் பாரதி.

நம் ஒவ்வை பாட்டி மட்டும் சும்மா இருப்பாளா என்ன?

“இளமையில் கல்”, “நூல் பல கல்”, “எண் எழுத்து இகழேல்”, “எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்” என்றல்லவா பாடி குவித்தாள்!

“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே”

இதைவிடவா வேறொரு சான்று வேண்டும்?

அன்று தமிழர்களின் கல்வி என்பது மதிப்பெண்ணுக்காக படித்துவிட்டு, உத்தியோகத்தை நோக்கிச் சென்ற கல்விமுறையல்லவே. கலைகள் பலக் கற்றாலும், பண்புகளை அடிப்படையாய் கொண்டு விளங்கிய பண்பாட்டுக் கல்வி அது. நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பலப் பண்புகளை ஊட்டி வளர்த்தது என் தமிழ்க்கல்வி.

இன்று அந்தக் கல்விநெறி சீர்குலைந்து பண்பாட்டுக்கல்வி சிதைந்து, வியாபாரக்கல்வியாக மாறிவிட்டது. அண்மையில் நான் எழுதிய புதுக்கவிதையொன்றில் இந்த அவலநிலையை எழுதியிருந்தேன்.

“டிகிரி வாங்கலையோ டிகிரி என்று
கூவிவிற்கும் சந்தைக்கல்வி”

இதுதான் இன்றைய நிலைமை.

“சேமமுற வேண்டுமெனில்
தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்”

என்று கூறிவிட்டுச் சென்றான் நம் முண்டாசுக்கவி.

தெருவுகலென்ன, இன்று பள்ளிகளில் கூட தமிழ்ப் பாடங்கள் அவ்வளவாக இல்லை. வள்ளுவனும் ஒவ்வையும் பள்ளிகளைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றபடுகின்றார்கள். பாட்டனும் பாட்டியும் பள்ளிக்கு எதற்கென்றோ?

பண்டைக்காலங்களில் கோவில் திண்ணைகளிலும், கோவில் மரத்தடிகளிளும்தான் கல்வி கற்றார்கள் நம் முன்னோர்கள். அதனால்தான் கல்விக்கூடங்களை இறைவன் வாழும் “பள்ளி” க்கூடங்களாக பாவித்து அவைகளைப் பள்ளி என்றழைத்தார்கள்.

எழுத்தறிவித்தவன் இறைவனானான். பாடச்சாலைகள் பள்ளிகலாயின.

அன்று, கல்வியே அறிவுக்கும், ஞானத்திற்கும் அடிப்படையாய்த் திகழ்ந்தது.

இவ்வளவேன், இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலும்கூட, மதிப்பெண் கல்விமுறை ஆட்சிப்புரிந்த காலத்திலும்கூட, தமிழ்ப் பண்பாட்டுக்கல்வி மறைமுகமாக கூடவே கைக்கோர்த்து நடந்து வந்தது.

“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்”

எவ்வளுவுதான் கல்வி கற்றாலும், இறைவனுடைய திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் பயன் என்ன என்று நெற்றியில் அடித்தார்ப்போல் கேட்டது தமிழ்.

கல்வியின் முக்கியத்துவம்பற்றி பறைச்சாற்றிய தமிழ்தான், இறைவனைத் தொழாவிட்டால் அந்தக்கல்வி பயன்தராமல் போய்விடுமென்று சொல்லித்தந்தது.

பெரியோரை மதித்தல், விருந்தோம்பல், செய்நன்றியறிதல், ஒழுக்கமுடவாழ்தல், உண்மைப்பேசுதல், தவம்செய்தல், தானம் செய்தல், கோபத்தை அடக்குதல் என்றெல்லாம் சொல்லாமல் சொல்லித்தந்தது என் தமிழ். என் இரண்டாம் தாயாய் எனை வளர்த்தது என் தமிழ் என்றால் அது மிகையாகாது.

கற்றுத்தருபவன் கடவுளுக்குச் சமமென்று ஆசிரியர்களை மதித்து போற்றும் தன்மை தமிழ் தந்த அறிவு.

“அ” என்றால் அம்மா என்று, தமிழ் முதல் எழுத்தை கற்றுத்தரும்போதுகூட, உறவில் முதலான அம்மாவை வைத்துதான் தமிழ்ப் பாடங்கள் அன்று தொடங்கின.

இன்றோ தமிழ் பாடப்புத்தகத்தில் அம்மா அனிலானாள்.

இன்று நம் தமிழ்நாட்டில், “International standard” முறையில் நடக்கும் பள்ளிக்கூடங்களில் முதலில் “அ” சொல்லித்தருவதில்லை.

சுலபமாக எழுதவரும் என்றெண்ணி, முதலில் சொல்லித்தரும் எழுத்து “ட”. One standing line “|” and then one sleeping line “ட” என்று தமிழைக்கூட ஆங்கிலத்தில் கற்றுத்தரும் அவலநிலைமை இன்று.

“பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மைக் கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடல் நன்றோ?”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s