இங்கிவனை யாம்பெறவே!!

‘வயிற்றுக்கு சோறிட வேண்டும் – இங்கு
வாழு மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து – இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்’

– பாரதி

1921, செப்டம்பர் 11 (இன்று), மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நம்மைவிட்டு பிரிந்து சென்ற நாள். அன்று தமிழ் வாடியது. தமிழ்த்தாய் கதறி அழுதாள். ஆனால், அவரின் இறுதி ஊர்வலத்தில் வெறும் 20 பேர் தான் கலந்துக்கொண்டார்கள்.

திரைப்பட ஹீரோக்களுக்கு கட் அவுட் வைப்பதற்கும், பாலபிஷேகம் செய்வதற்கும், முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்கும் கூட்டம் கூட்டமாய் அலைமோதும் நம் மக்கள், அன்று பாரதியின் ஊர்வலத்தின் போது காணாமல் போன மாயம் என்ன?

‘தனி ஒருவனுக்கு உணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்’

என்று பொங்கியவனுக்கு வெறும் 20 பேர் தான்.

‘காக்கை குருவியும் எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்’

என்று யாதும் தனதாக்கி நின்றவனுக்கு யாரும் இல்லா ஓர் இறுதி ஊர்வலம்.

இது எங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே நடக்கும் ஓர் அவலம்.

கங்கையில் மூழ்கினாலும் தமிழனுக்கு தீராத ஓர் பாவமல்லவா இது?

வந்தாரை வாழவைக்கும் தமிழனுக்கு பாவம் நம்மவரை வாழவைக்க ஏனோ தெரியவில்லை.

‘நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைக்கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்’

38 வயது மட்டுமே வாழ்ந்தான் அந்த மகாகவி. இருந்தும் எத்தனை ஞானம், எத்தனை தெளிவு.

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை என்றாள் ஔவை. அந்த கொடிய நோய் பாரதியை பிடித்து வாட்டியது. பசியும் பட்டினியும் அவனை ஒரு பக்கம் வாட்ட, ஆங்கிலேயனின் படை மறுபக்கம் விரட்ட,

‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்றப் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’

என்று பாடிக் களித்தான்.

அந்த பராசக்தியிடம், எனக்கு இதெல்லாம் தா என்று பட்டியலிட்டு கேட்டான். கெஞ்சியல்ல. உரிமையுடன் அவன் கேட்கும் அழகே அழகு.

அம்மா பராசக்தி, நான் வறுமையில் வாடுகிறேன். எனக்கு பொன்னும் பொருளும் தா என்று கேட்டிருப்பானோ?

‘விசையுறு பந்தினைப்போல் உள்ளம்
வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
தசையினைத் தீசுடினும் – சிவ
சக்தியைப் பாடுநல் லகங்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?’

நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாய் வளம் வரும் இன்றையப் புதுமைப் பெண்களுக்கோர் புதியப் பாதையை அன்று பிள்ளையார் சுழி போட்டு தொடங்கியவன் நம் முண்டாசுக்கவி.

‘பெண் விடுதலை வேண்டும்
பெரியக் கடவுள் காக்க வேண்டும்’
என்றான்.

‘தையலை உயர்வு செய்’ என்றான்.

பெண்ணை சக்தியின் வடிவமாய்க் கண்டான்.

‘தவத்தினை நிதம் புரி’ என்று தவத்தின் வலிமை அறிந்திருந்தான் அந்தச் சித்தன்.

நான் பாரதியைப்பற்றி படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இது. மகாத்தமா காந்தியை பாரதிக்கு பிடிக்கும்.
ஒரு சமயம் நாட்டு மக்களுக்கு எழுதும் ஒரு கடிதத்தை காந்தி ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். இதைப் படித்த பாரதி உடனே காந்திக்கு கடிதம் எழுதினான். கடிதத்தை உங்கள் தாய்மொழி குஜராத்தியில் எழுதியிருக்கவேண்டும். இல்லையெனில், பெரும்பாலோர் பேசும் இந்திய மொழிகளில் ஒன்றான இந்தியில் எழுதியிருக்கவேண்டும். ஆங்கிலத்தில் எழுதியிருக்கக் கூடாதென்றான்.

காந்தியடிகள், பாரதிக்கு பதில் கடிதம் எழுதினார். அதில், பாரதி, நீ சொல்லுவது சரிதான். நான் அக்கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கக்கூடாது. ஆனால், நீ எனுக்கு எழுதியிருக்கும் இக்கடிதத்தை ஏன் ஆங்கிலத்தில் எழுதினாய் என்றார்.

அதற்கு, பாரதி, ஐயா, பிறர் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டும் போது என் தாய்மொழி தமிழில் நான் எழுதுவதில்லை என்றானாம்.

இது தமிழ்மேல் அவன் கொண்ட காதலன்றோ? பூவின் மென்மையன்றோ நம் தமிழ்!

தமிழனின் அடையாளங்களான காதலையும், பக்தியையும், வீரத்தையும் பாரதியைவிட வேறு யாரால் அவ்வளவு அழகாகப் பாடிவிட முடியும்?

‘நீயென தின்னுயிர் கண்ணம்மா – எந்த
நேரமு நின்றனைப் போற்றுவேன் – துயர்
போயின போயின துன்பங்கள் – நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே – என்றன்
வாயினி லேயமு தூறுதே – கண்ணம்மாவென்ற
பேர்சொலும் போழ்திலே – உயிர்
தீயினி லேவளர் சோதியே – என்றன்
சிந்தனை யேஎன்றன் சித்தமே!

காற்று வெளியிடை கண்ணம்மா – நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்;’

மற்றுமொரு காதல் பாடலான சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா என்ற பாடலில்

‘சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று’

இது காதலின் உச்சமன்றோ?

கண்ணனை தன் தாயாய், தந்தையாய், குருவாய், சீடனாய், குலதெய்வமாய், தோழனாய், காதலனாய், குழந்தையாய், அரசனாய், சேவகனாய் எல்லாமாய் பார்த்தான்.

‘எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி யென்றுசொன்னான்
இங்கிவனை யான்பெறவே என்னதவஞ் செய்துவிட்டேன்!’

இவ்வரிகளில் மனமுருகாத உள்ளமும் உண்டோ?

சுதந்திரப் பாடல்களும், தேச பக்தி பாடல்களும் தான் எத்தனை எத்தனை.

‘என்று தணியும் இந்த அடிமையின் மோகம்’
எவ்வளவு வலுவான் சொற்கள் இவை. அடிமையாய் இருந்து இருந்து, பழகிப்போய், அடிமையாய் இருப்பதிலும் சுகம் என்றிருப்பார்கள் சிலர். இது அடிமையின் மோகம் தானே?

‘மோகத்தைக் கொன்றுவிடு, அல்லாலென்தன்
மூச்சை நிறுத்திவிடு;’

விடுதலைக்கு ஓயாமல் குரல் கொடுத்தான்.

‘தண்ணீர்விட்டோ வளர்த்தோம்? சர்வேசா?
இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்?
கருகத் திருவுளமோ!’

சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஔவையின் சொல்லுக்கிணங்க,

‘சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’

என்று ஒரு பக்கம் பாப்பா பாட்டு பாடிக்கொண்டே மறுபக்கம், ஆங்கிலேயனைப் பார்த்து

‘ஆயிரம் உண்டிங்கு சாதி – எனில்
அன்னியன் வந்து புகல் என்ன நீதி’

என்றான். எங்களுக்குள் ஆயிரம் சண்டைகள் வரலாம். தவறுதான் என்றாலும் அதை நாங்கள் திருத்திக்கொள்கிறோம். ஆனால் இதைக் காரணமாக வைத்துக்கொண்டு எங்கள் நாட்டில் நீ வந்தமர்வது என்ன நியாயம்?

கேள்வி கேட்க பயந்து, ஆங்கிலேய மோகம்கொண்டு, அவன்பின் சென்றோரைப் பார்த்து கோபங்கொண்டு பாடினான்.

‘நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி! கிளியே!
வாய் சொலில் வீரரடி!’

பாரதியின் கனவு பலித்தது. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அன்று பாரதி இல்லை. ஆனால் இறக்கும்முன்பே நாம் சுதந்திரம் பெற்றுவிட்டதாய் அவன் எழுதிய பாடலைத்தான் இன்றும் நாம் பாடிக்கொண்டிருக்கிறோம்.

‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே’

ஆங்கிலேயனிடமிருந்து சுதந்திரம் பெற்றுவிட்டாலும், அடிமையின் மோகம் போகவில்லையோ? இன்னும் நாம் விட்டு விடுதலையாக வேண்டிய விஷயங்கள் பல உண்டோ?

விட்டு விடுதலை யாகி நிற்போம் அந்தச்
சிட்டுக் குருவியைப் போல!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s