தேர்தல் களம்

தேர்தல் களம்

‘நீங்க நல்லவரா கெட்டவரா’ என்ற ஒரு வரி போதும்…நாயகன் திரைப்படத்தின் வேலு நாயக்கர் உருவம் நம் கண் முன் தோன்றிவிடும். வேலு நாயக்கரை நினைவுக்கொள்ளும் நமக்கு நம் தமிழ் வீரப்பெண் வேலு நாச்சியாரைத் தெரிந்திருக்கவில்லை.

ஆங்கிலேயனை எதிர்த்து வெற்றிக்கொண்ட முதல் இந்தியப் பெண் நம் தமிழினத்தின் வேலு நாச்சியார்.

தமிழர்களுக்கே உரிய மறதி நோயிது. இன்னும் எத்தனை மறதிகள். அறவழிக் காட்டிய வள்ளுவனையும் ஒவ்வையையும் இன்று மறந்துவிட்டதால் ஏற்பட்ட நிலைப் போலும்.

அன்று 1921, செப்டம்பர் 11, பாரதி நம்மை விட்டுப் பிரிந்துச் சென்ற நாள்.

‘தனி ஒருவனுக்கு உணவிலை யெனில்

ஜகத்தினை அழித்திடுவோம்

 என்று பொங்கியவனுக்கு வெறும் 20 பேர் தான் அவன் இறுதி ஊர்வலத்தில்.

‘காக்கை குருவியும் எங்கள் ஜாதி

நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்க களியாட்டம்

என்று யாதும் தனதாக்கி நின்றவனுக்கு யாரும் இல்லா ஓர் இறுதி ஊர்வலம்.

இன்று பாரதியைக் கொண்டாடி மகிழ்கிறோம். அன்று பசியோடு இசைப் பாடினான் என் மீசைப் புலவன்.

குமாரசாமி காமராஜ் எனும் காமராசர், 1954 – 1963 வரை, 9 ஆண்டுகள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தார். அவர் ஆட்சிக்காலத்தில்

  • தமிழகத்தில், பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது
  • மதிய உணவுத் திட்டம் பள்ளிகளில் வந்தது
  • பல நீர்ப் பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன
  • முக்கிய பல தொழிற்சாலைகள் துவக்கப்பட்டன

இருந்தும், மக்கள் நலனுக்கு இத்தனை செய்த காமராசரையே 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் தோற்கடிக்கச் செய்தது நம் தமிழினம்.

கா. ந. அண்ணாதுரை எனும் அறிஞர் அண்ணா, 1967 – 1969 வரை, 2 ஆண்டுகள் மட்டுமே, தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தார்.

இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக ஹிந்தி மொழியை நிலைநாட்ட செயல்பட்ட மத்திய அரசின் முயற்சியை எதிர்த்துப் போராடியப் பெருமை அண்ணாவைச் சாரும். பெரும்பாலான மாநிலங்களில் பேசப்படும் மொழி ஹிந்தி ஆகையால் அதுவே நாட்டின் ஒரே அலுவல் மொழியாகவேண்டும் என்று நியாயப்படுத்த முயன்ற மத்திய அரசிடம் அண்ணா சொன்ன பதில் இன்றும் நம் மனங்களைக் கவர்ந்த ஒன்று. அதிக மக்கள் பேசும் மொழி என்பதால் மட்டுமே ஹிந்தி தேர்வுச் செய்யப் படுமேயானால், நம் நாட்டின் தேசியப் பறவை, எண்ணிக்கையில் அதிகமான காக்கையாகத்தான் இருக்கவேண்டும். அழகால் வசீகரிக்கும் பறவை என்பதால்தானே நம் நாட்டின் தேசியப் பறவை மயில் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் பார்க்கப்போனால், அழகான தமிழ் மொழியே நம் நாட்டின் தேசிய மொழியாகவேண்டும் என்று கூறி அனைவரின் வாயை மூடினார் அன்று. இப்படி அவரின் அறிவுத்திறனைப் பற்றியும், பேச்சுத்திறன் பற்றியும், தமிழ் மொழிப் பற்றுப் பற்றியும் நாம் பல விஷயங்கள் படித்ததும், கேட்டதும் உண்டு.

மெட்ராஸ் மாநிலத்திற்கு தமிழ் நாடு என்றுப் பெயரை மாற்றியவர் அண்ணா.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று அனைவரையும் மதித்தவர் அண்ணா.

இன்று ‘அண்ணாவின் நாமம் வாழ்க’ என்று சொல்லி அண்ணாவுக்கே நாமம் போட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஜீவானந்தம், கக்கன் போன்ற பொதுநல வாதிகள் கொண்டிருந்தது தமிழ் நாட்டுச் சட்டசபை அன்று.

அன்று மேடைப் பேச்சுக்கள், குறிப்பாக தேர்தல் காலங்களில், மக்களைச் சுண்டி இழுத்தன. தலைவர்களும், பேச்சாளர்களும் மேடைகளில் தங்கள் தமிழால் கூட்டங்களைச் சேர்த்தார்கள். மக்கள் நலனும், அது சார்ந்த கொள்கைகளுமே அன்று பேசப்பட்டன. கலைக்கட்டின அன்று அரசியல் மேடைப் பேச்சுகள்.

இன்று, தமிழ் நாடு, 15ஆவது சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. தலைவர்களுக்கே தங்கள் கூட்டணிக் கட்சிகளை ஞாபகம் இருக்குமா என்று தெரியாத ஒரு நிலை. எத்தனைக் கட்சிகள், எத்தனைச் சின்னங்கள், எத்தனைக் கூட்டணிகள். மறதியில் வாழும் தமிழ் மக்களின் ஞாபகத் திறனுக்கு சவாலாக இருக்கும் இந்தத் தேர்தல்.

நாம் வெட்கித் தலைகுனியும் பல மேடைப் பேச்சுக்கள் இன்று. மேடை நாகரீகம் என்பதையே அறிந்திடாத பல பேச்சாளர்கள். ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டும், ஏசிக்கொண்டும், ஒருமையில் பேசிக்கொண்டும், தகாத சொற்களால் திட்டிக்கொண்டும், ஏன் உமிழ்ந்துக்கொண்டும் பேசுவதுதான் இன்றைய ஸ்டைல் போலும். நாட்டை ஆளும் திறமை இருக்கிறதோ இல்லையோ, தலைவர்களின் சில பல திறமைகளை இன்று மேடைகளில் பார்க்க முடிகிறது.

திரைப்படங்களில் நடித்துவிட்டால் மேடை ஏறலாம். பிரச்சாரங்கள் செய்யலாம்…கூட்டங்களைச் சேர்க்கும் ஒரு ஏற்பாடு இது. இந்த டெக்னிக் நன்றாகவே வேலைச் செய்கிறது.

வெள்ளித்திரை நாயகர்களுக்குக் கட் அவுட் வைத்தும், பால் அபிஷேகம் செய்தும் பழகிவிட்ட கூட்டம் தானே நாம்.

அன்று பெரியாரும், காமராஜரும், அண்ணாவும் இன்னும் பெருந்தலைவர்களும் அருமையானப் பேச்சாற்றலால் அலங்கரித்த மேடைகள் இன்று கூசி நிற்கின்றன. 2000 ஆண்டுகளுக்கும் மேலும் பழைமையான இனமான தமிழினம், ஜனநாயக நாட்டில், இன்று 15 ஆண்டுகள் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னும், பண்பாட்டிலும், நாகரீகத்திலும் பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இன்றையத் தேர்தல் களங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள்!

அன்றுத் தலைவர்களை அன்னார்ந்துப் பார்த்த நாம் இன்று போதையில் தள்ளாடுவதைப் பார்க்கிறோம். தள்ளாடிக்கொண்டு மேடையில் ஏறி புரியாமல் பேசுவதை உட்கார்ந்து கேட்கவும், பேசியது புரிந்துவிட்ட மாதிரி நினைத்துக்கொண்டு கைத்தட்டவும் ஒரு கூட்டம்.

அன்றையத் தலைவர்கள் கேள்விக்கேட்கும் பத்திரிகை நிருபர்களைத் ‘தூ’ என்றுத் துப்பியதாக வரலாறில்லை.

சாதி கட்சிகள் வேண்டாம் என்று சொல்லும் நமக்கு தமிழினப்பற்றை ஊட்டும் இனக் கட்சிகள் இன்று. நம் மேல்த்தோலை உரித்துவிட்டால் உள்ளிருக்கும் ரத்தமும் சதையும் ஒன்றுதான். தமிழ் பேசுபவனும் தெலுங்கு பேசுபவனும் சுவாசிப்பது ஒரே காற்று தான். அன்று மா. போ. சி. போன்றத் தலைவர்கள் போராடி வாங்கவில்லை என்றால் இன்று திருத்தணியில் வசிக்கும் மக்கள் பேசிக்கொண்டிருப்பது என்ன மொழி? எல்லைக்கோடுகள் நம் வசதிகளுக்காக நாம் போட்டுக்கொண்டதுதானே?

தமிழ்ப் பற்று இருக்கட்டும், தமிழனுக்கு அடுத்த வேலைச் சாப்பாடு?

ஆயிரத்தில், லட்சங்களில் ஊழல்கள் நடந்தது போய், இன்று ஆயிரம் கோடிகளில்! அனைத்தும் தெரிந்திருந்தும் ஞாபக மறதியால், அனைத்தையும் மறந்து விட்டு ஆளும் தகுதியை மீண்டும் மீண்டும் பட்டா போட்டுக் கொடுத்துவிடும் தமிழினம்.

அது சரி. மாற்றம் தேவை. சல்லடைப் போட்டு சலித்துப் பார்த்தும், பூதக் கண்ணாடிக் கொண்டு உத்துப் பார்த்தும் மாற்று ஒன்று கிடைத்தபாடில்லையே.

மெத்தப் படித்து மேதைகளானோம். சுயநலத்தை பொது உடைமையாக்கினோம். அரசியல் ஒரு சாக்கடை என்று மூக்கை மூடிக்கொண்டு ஒதுங்கி நடந்தோம். ‘என்ன ஆனால் எனக்கென்ன’ என்று ஒய்யாரக் கதைப் படித்தோம். சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்கையில் கந்தல் கோலத்தில் கதறுகிறது தமிழ் நாடு இன்று. திரைப்பட மோகத்தில் தமிழன். இலவசத்திற்கு கைகள் ஏந்தும் தமிழன். இருட்டின் பிடியில் தமிழன். அறியாமை, வறுமை, கோபம், அழுகை, வெறுமை, வெறுப்பு என்று உணர்ச்சிகளால் செய்வதறியாது இயலாமையில் இன்றுத் தமிழன்.

என் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கோ இல்லையோ அரசியல் இருக்கிறது. நான் சமைக்கும் எண்ணையில் ஒமேகா 3 இருக்கிறதோ இல்லையோ அரசியல் இருக்கிறது. வெங்காயத்தின் விலையில் அரசியல் இருக்கிறது. நான் குடிக்கும் தண்ணீரிலும், ஏன் சுவாசிக்கும் காற்றின் தரத்திலும் கூட அரசியல் இருக்கிறது.

இன்று காலையில் நான் என்ன சாப்பிடவேண்டும், என்ன உடுத்தவேண்டும் என்று என் ஒவ்வொரு முடிவிலும், செயலிலும் நமக்குத் தெரியாமலேயே அரசியல் இருக்கிறது.

ஆனால் நம்மில் பல பேருக்கு ஏனோ அரசியல் பேசப் பிடிக்கவில்லை. என்ன செய்ய?

பேசினால் தானே விஷயம் புரியும். அலசி ஆராய்ந்தால் தானே உண்மைத் தெரியும். குட்டையை குழப்பினால்தானே தெளிவு வரும்.

அரசியல் குப்பை என்று மூக்கை மூடிக்கொண்டு பலரும் போய்விட்டதால்தான் இன்று ஆங்காங்கே குப்பை மேடுகளின் துர்நாற்றம். மேடுகள், பெரும் மலைகளாகி நம்மை மூடிப் புதைக்குமுன், மூக்கை மூடிக்கொண்டு தள்ளிச் செல்லாமல் இன்றே களமிறங்கிச் சுத்தம் செய்வோம். நம் சந்ததியினருக்காக. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்காக.

இன்று பிறக்கும் துர்முகி தமிழ்ப் புத்தாண்டில் துன்பங்கள் தீர்ந்து, நல்லாட்சி மலர்ந்து, அனைவருக்கும் நல் வழிப் பிறக்கட்டும்.

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!