பெண்

 

பெண் இனத்தின் ஒரு குரலாக ஒலிக்கிறது என் பேனாமுனை இன்று. அந்த மௌன மொழியின் ஊற்று இதோ.

1. தகடூரை (இன்றைய தர்மபுரி) தலைநகராகக்கொண்டு ஆண்டுவந்த வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி எனும் மன்னனின் அரசவைப் புலவராக வாழ்ந்தார் சங்கக்கால ஔவை. முதல் பெண் தூதுவரும் இவர் எனலாம். அதியமானுக்காக, தொண்டைமானிடம் தூது போனாள் ஔவை.

2. சில நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு வீரத் தமிழ்ப் பெண் வேலு நாச்சியார். ராமநாதபுரத்தின் இளவரசி, சிவகங்கை மன்னன் வடுகநாத தேவரை மணந்து சிவகங்கைக்கு அரசியானார். காளையார் கோயிலில், ஆர்காட் நவாப் மற்றும் ஆங்கிலேயரால் அவர் கணவர்  கொல்லப்பட்டதை அடுத்து, சபதம் எடுத்து, பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு தம் நாட்டை ஆங்கிலேயனிடமிருந்து மீட்டெடுத்தார் வேலு நாச்சியார். குயிலி என்னும் பெண் இவர் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் எனலாம்.

3. அதி கனமான வாளை ஒரு கையில் ஏந்திக்கொண்டு, தன் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு, குதிரையில் சென்று ஆங்கிலேயனை எதிர்த்துப் போரிட்டாள் ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்!

4.செப்டம்பர் 5, 1986 அன்று பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பான் ஆம் விமானம் 73 இல் விமானப் பணிப்பெண் நீர்ஜா பானாட். தன் உயிரைப் பணயம் வைத்து விமானப் பயணிகளைக் காப்பாற்றி உயிர் இழந்தாள். நாட்டின் உயரிய விருதான அசோக சக்ரா விருது நீர்ஜாவுக்கு வழங்கப்பட்டது.

அவ்வப்போது சரித்தரத்தை திருப்பிப்போடும் பெண்கள் வந்துப்போகிறார்கள்.

இவர்களுக்கிடையில், நம் அம்மாவும் பாட்டியும், கொள்ளுப் பாட்டியும், எள்ளுப் பாட்டியும் மௌனப் போரிட்டார்கள். அந்தப் மௌன புரட்சிகளில் போடப்பட்டதுதான் இன்று நீங்களும், நானும் புதுமைப் பெண்களாய் நடந்துச் செல்லும் இந்த வெற்றிப் பாதை.

இந்த பூமியில் அனைத்து உயிர்களும் வாழ மூலாதாரம் சக்தி. அந்த சக்தியின் வடிவம் பெண். பெண் அன்பு, பெண் ஆழம், பெண் அழகு, பெண் மென்மை. பெண் வலிமை. பெண் சுமப்பவள். பெண் காப்பவள். பெண் ஆக்கசக்தி!

அனைத்தையும் சுமந்து நிற்கும் இந்த பூமி பெண்ணின் வடிவம். நீரை சுமந்துகொண்டு ஓடும் ஆறு பெண்ணின் வடிவம். இந்த ஆக்கசக்தி மெல்ல மெல்ல நசுக்கப்பட்டு கசக்கப்பட்டு அழியும் சக்தியாகிக்கொண்டிருகிறது பல காலமாய். மீட்கும் பணியில் இன்று நாம்!

அன்று பெண் ஏனோ குனிந்தாள். இன்றுவரை நிமிரவிடாமல் கொள்கைக் காக்கிறது இந்தச் சமூகம்.

அன்று பீமனும் நளனும் தானே சமையலில் கில்லாடிகள்? பின் பெண் எப்படி சமையல் அறையில் பூட்டப்பட்டாள்?

அடுப்பை ஊதி ஊதி, இரும்பி, புகைந்து, கருத்து வெந்து, நொந்தார்கள் நம் மூதாதையப் பெண்கள்.

அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்று படிப்பை கனவாக்கி, அடுப்பை சொந்தமாக்கியது இந்த சமூகம்.

ஆசைக்குப் பெண், ஆஸ்த்திக்கு ஆண் என்று உரிமையைப் பறித்தது இந்தச் சமூகம்.

விட்டுக் கொடுக்கவேண்டும், பொறுமை வேண்டும் என்று உணர்வுகளை குழித் தோண்டிப் புதைத்தது இந்த சமூகம்.

பெண் போதைப் பொருளானாள். பூமியைப்போல், ஆறுகளைப்போல் தாங்கிக்கொள்ளவும், தாகம் தீர்க்கவும் பொத்திப் பாதுகாக்கப்பட்டாள்.

அறியாமலே மெல்ல மெல்ல அடிமையானாள். அடிமையின் மோகம் ரத்தத்தில் கரைந்து இன்று DNAவிலும் ஊடுருவிவிட்டது. ரத்தத்தை சுத்திகரித்து, DNAவைப் புதுபிக்கும் முயற்சியில் இன்று நாம்!

இன்றும் பிறக்கும் சிலப் பெண் சிசுக்களுக்கு பசிக்கு உணவாவது தாய்ப்பால் அல்ல, கள்ளிப்பால். கள்ளிப்பாலில் தப்பித்தால் கைக்கொடுப்பது குப்பைத்தொட்டிகள். இது திரைப்படக் காட்சிகளல்ல. நிதர்சனங்கள்.

நிர்பையாவைப்போல் எத்தனை எத்தனைப் பெண் பிள்ளைகள் எங்கும். மெழுகுவத்தி ஏற்றிவைத்து ஊர்வலமாய்ச் சென்று அழுவதைத்தவிர வேறு என்ன செய்ய முடிந்தது?

கனவு காணும் இளைஞர் கூட்டம் சில இன்று கையில் எடுப்பது பாட்டிலை… நீங்கள் நினைப்பது போல் மது பாட்டிலை அல்ல… ஆசிட் பாட்டிலை.

இன்றும் பல பெண்கள், படித்த பட்டதாரிகள், அலுவலக மேலாளர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், பாரதியின் புதுமைப் பெண்கள்…. இவர்களின் மனதுக்குள் மௌனக் குமுறல்கள், கண்ணீர் இல்லா அழுகைகள். மனதுக்குள் வலிகளோடு வெளியே சிரிக்கும் பதுமைகள் இப்பெண்கள். சாதிக்கும் இவர்கள் சமுதாயத்தின் வழிகாட்டிகள் அல்லவா! அதனால் பாவம் இவர்களால் இன்று சத்தமாகக் கூட அழமுடியாது. வெற்றியின் முதற்படியில் நிற்கும் நம் தாயும், சகோதரியும், மனைவியும், மகளும் உட்பட.

கேள்விகள் பல தாண்டி, வேலிகள் பல கடந்து, முட்பாதைகள் பல நடந்து, பெண் அவள் இன்று நடந்து வந்த தூரம் அதிகம். சிலுவையைச் சுமந்து வந்த வலி அவள் தோள்கள் அறியும். இன்று தூரத்தில் மெல்லியதாய் நிழலாடும் ஒரு வெளிச்சம்.

இந்த மங்கிய ஒளியில் முன்செல்ல போராடும் பெண். அன்று கரண்டி பிடித்த கையில் இன்று கணினி. ராகெட் முதல் ராணுவம் வரை, வர்த்தகம் முதல் மருத்துவம் வரை, விமானம் முதல் ஆட்சி சிம்மாசனம் வரை இன்று சாதிக்கும் பெண்கள் பலர்.

இன்றும் சமத்துவத்திர்க்காகவும், உரிமைகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் இனம் பெண்ணினம்.

மார்ச் 8 உலக மகளிர் தினம். முக நூலிலும் WhatsApp பிலும் பெண்கள் அவர்களுக்குள்ளே வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்வது அழகாக இருக்கிறது. நம் வெற்றியை நாம் கொண்டாடிக்கொள்வது ஒரு மகிழ்ச்சி.

இருந்தும், அவள் பிறந்த நாளைக்கு அவளே வாழ்த்து சொல்லிக்கொள்ளும் நிலை தான் இன்று பெண்ணுக்கு.

மகளிர் தினம் என்று ஒன்றை வலியுறுத்த அவசியப்படாத நாள் ஒன்று வருமேயானால் அதுவே உண்மையில் கொண்டாடப்படவேண்டிய மகளிர் தினம். சரிதானே!

முடிக்கும் முன் ஒரு கேள்வி.

ஆயிரம் குதிரைகளின் சக்தியை ஒன்று சேர்த்து ஓங்கி உதைத்து கீழே தள்ளும் ஓர் மர்ம வலி. நெஞ்சைப் பிளந்து உயிரைப் பிடுங்கி எறியும் ஓர் ராட்சஸ வலி. பின் புயலடித்து ஓய்ந்ததுபோல், வலித்த நம் அம்மாவின் கைகளில் குழந்தைகளாக தவழ்ந்தவர்கள் தானே நீங்களும், நானும், இந்தச் சமுதாயம் முழுதும். நம்மைத் தாங்கிச் சுமந்து வலித்து ஈன்ற இந்தப் பெண் எப்படி தாழ்ந்தவளானாள்?

என் பாட்டி அன்று கதவுகளுக்குப் பின்னால். பின், என் அம்மா திரை விளக்கி முகம் காட்டினாள். இன்று திரைக்குமுன் நின்று கேள்விகள் கேட்கும் நான்.

பல கேள்விகளுக்கு இடையில் ஒன்று மட்டும் புரிகிறது… நாம் போகவேண்டிய தூரம் இன்னும் அதிகம்!