காலடி சுவடுகள்
(இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் வெறும் கற்பனையே)
கீழ்வானம் வெளுத்தது. பறவைகள் இரை தேட கூட்டைவிட்டு பறந்தன. மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றுகொண்டிருந்தன. பூட்சை மாட்டிக்கொண்டு முன்னாவும் தயாரானான். வெளியே காலடி சத்தம் கேட்டு கதவருகில் சென்றான். அதுற்குள் வெளியிலிரிந்து கதவை தட்டும் சத்தம் கேட்டது.
“அம்மா நான் போயிட்டு வரேன் .. வர ராத்திரி ஆயிடும். நீ சாப்பிட்டு தூங்கு. எனக்காக காத்திருக்கவேண்டாம்” என்று அவன் தாய்மொழி ஹிந்தியில் உரக்க சொல்லிவிட்டு, சுவரில் இருந்த ஹனுமான் படத்தை தொட்டு கும்பிட்டுக்கொண்டே கதவை திறந்து வெளியே வந்தான்.
“ஜாக்கிரதை முன்னா .. பார்த்து போ .. கூட்டமாவே போங்க .. தனியா எங்கேயும் போகவேண்டாம்” என்று சொல்லிக்கொண்டே ஓடி வந்து கதவை உள்பக்கம் தாளிட்டு கொண்டாள் அம்மா. சுவரில் இருந்த ஹனுமான் படத்திடம் நின்று கைகூப்பி ஏதோ ஜெபித்துவிட்டு அடுப்படிக்கு சென்றாள்.
அம்மா சொன்னதை முன்னா பெரிதாக காதில் போட்டுக்கொள்ளவில்லை. வாசலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த சிலருடன் புறப்பட்டு சென்றான்.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் ஒரு சிறிய அழகிய கிராமம் தான் முன்னாவின் சொந்த ஊர். தந்தை சில வருடங்களுக்குமுன் மாரடைப்பால் காலமானார். அக்கா மாயா திருமணமாகி கணவருடன் ஆகிரவில் வசிக்கிறாள்.
அவன் கிராமத்தில் அதிக படிப்பு படித்தவர்களில் முன்னாவும் ஒருவன். பிளஸ் 2 பாஸ். மேலே படிக்க வசதியும் ஆர்வமும் இல்லை முன்னாவுக்கு. தற்போது சொந்தமான சிறிய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறான். அப்பா விட்டுசென்ற விவசாய தொழிலை செய்வது அவனுக்கு வசதியாகத்தான் இருந்தது.
ஆனாலும், முன்னாவின் நாட்டம் விவசாயத்தில் இல்லை. சிறு வயதிலிருந்தே விலங்குகளின் மீது கூடுதல் பாசமும், கருணையும் இருந்தது அவனுக்கு. வனவிலங்கு பாதுகாப்பு துறையில் பணி செய்யவே அவன் விரும்பினான்.
தன் கிராமம் மட்டுமின்றி அருகிலிருந்த பல சிறு கிராமங்களை சுற்றி அடர்த்தியான காடுகள் இருந்ததால் முன்னா அடிக்கடி பல விலங்குகளை பார்ப்பது வழக்கம்.
சமயங்களில் காட்டு ராணியான புலி கூட தடம் மாறி காட்டைவிட்டு வெளியே வருவதுண்டு. ஓரிரு புலிகளை முன்னாவும் பார்த்திருக்கிறான். ஜன நடமாட்டத்தை பார்த்தவுடன் தடமரிந்து அவை மீண்டும் காட்டுக்குள் ஓடிவிடும்.
மான்கள், குரங்கு கூட்டம், காட்டெருமை, காட்டுப்பன்றி, நரி, முள்ளம்பன்றி இன்னும் பெயர் தெரியாத பல விலங்கினங்களை முன்னா அடிக்கடி பார்ப்பதுண்டு. பல சமயம் இம்மிருகங்களை ஆட்கள் வேட்டையாடி கொன்று தூக்கிச் செல்வதைக்கண்டு முன்னாவுக்கு நெஞ்சு பதைபதைக்கும். சில சமயம் இறந்துபோகாமல் உயிர் ஊசலாடும் விலங்குகள் இவனைப்பார்த்து “என்னை எப்படியாவது காப்பாத்து .. என் பிள்ளைகள் எனக்காக பசியோடு காத்துக்கிட்டு இருக்கும்” ன்னு இவனை பார்த்து அழுவதைப்போல முன்னாவுக்கு தோணும்.
மனதுக்குள் அழுவதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது அவனால். அந்த இரக்கமும் துக்கமும் தான் அவனை மனதளவில் இன்று ஒரு வனவிலங்கு ஆர்வலனாக மாற்றியது.
“ஏன் இந்த விலங்குகள் இப்படி வலிய வந்து இந்த கொடிய வேடர்களிடம் மாட்டிகொல்கின்றன” என்று சிறு வயதில் தன்னைத்தானே அவன் கேட்டுக்கொண்டு விடை புரியாமல் நின்றதுண்டு.
பெரியவனானதும் அவனுக்கே புரிந்து போனது.
மக்கள் தொகை பெருக பெருக, காடுகள் அழிக்கப்பட்டன. ஒரு காலத்தில் காட்டுபகுதியாக இருந்த இடமெல்லாம் இன்று விவசாய நிலமாகவும், மக்கள் வசிக்கும் நிலமாகவும் மாறிவிட்டன.
விலங்குகளின் இருப்பிடத்தை மனிதன் அபகரித்துக்கொண்டது மட்டுமல்லாமல் அவைகளை வேட்டையாடி கொன்று வீழ்த்துவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி அவனுள் எழுந்தது.
பலரிடம் இந்த கேள்வியை கேட்டான் முன்னா. சிலருக்கு பதில் சொல்ல நேரமில்லை.சிலருக்கு கேள்வியை கேட்கக்கூட நேரமில்லை. இன்னும் சிலருக்கு இந்த கேள்வியே புரியவில்லை.
பலருக்கு அவன் நியாயம் நியாயமாக படவில்லை. ‘சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட்’ என்று ஆங்கிலத்தில் கூறுவது இங்கு சரியாக பொருந்தியது. ஆனால் இது எவ்வளவு ஆபத்து என்றுதான் யாரும் உணரவில்லை.
அப்போதுதான் ஒரு நாள் கிராமமே நடுங்கும்படி ஒரு கோரம் நடந்தது. காட்டிலிருந்து தடம்மாறி வெளிவந்த ஒரு பெண் புலி முன்னா கிராமத்துக்கு பக்கத்து கிராமத்தில் வசித்துவந்த ஒரு ஆளை அடித்து கொன்றுவிட்டதாக ஊரே பேசிக்கொண்டது. முன்னா உட்பட அனைவருக்கும் தூக்கிவாரி போட்டது. இதுவரை அங்கு இதுபோல் எப்பொழுதும் நடந்ததில்லை.
அந்த பகுதிக்கு அருகில்தான் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா இருக்கிறது. இது அரசாங்க நிதியில் நடத்தப்படும் ஒரு ரிசர்வ். அங்கிருந்து வெளிவந்த ஒரு புலிதான் அந்த கிராமத்து ஆளை அடித்து கொன்று விட்டதாக மக்கள் பேசிக்கொண்டார்கள்.
சில நாட்களுக்குப்பின் மீண்டும் ஒரு பயங்கரம். காலையில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு ஐம்பது வயது ஆளை பின் இருந்து தாக்கி கொன்றது அந்த புலி.
சுற்றி இருக்கும் அனைத்து கிராமங்களும் நடுங்கின. அந்த புலி காட்டுக்குள் திரும்பி செல்லாமல் இங்கு எங்கோதான் சுற்றிகொண்டிருக்கிறது என்பது உறுதியானது.
பார்க்கும் இடத்தில் அந்த புலியை சுட அரசு ஆணையிட்டது. அதற்குள் பலியானவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.
வெளியில் விளையாட சென்ற பிள்ளையை காணவில்லை. சுள்ளி, விறகு பொறுக்கச்சென்ற பெண் வீடு திரும்பவில்லை. மாடு மேய்க்கச்சென்ற பையன் திரும்பி வரவில்லை என்று ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புகார் வந்தபடி இருந்தது. காணாமல் போனவர்களை ஊரே தேடி சென்றது.
பெரும்பாலும் காணாமல் போனவர்களின் உடை, டர்பன், காலணி இவைகளுடன் உறைந்துபோன ரத்தம் இவைதான் கிடைக்கும். சில சமயம் கோரமாய் சிதைந்து கிடக்கும் உடல்கள் கிடைக்கும். ரத்தம் உறையவைக்கும் காட்சிகள் அவை.
நன்கு வளர்ந்த புலிக்கு ஒரு ஆளை கொள்ள சுமார் 30 வினாடிகளே போதுமாம். பெரும்பாலும் பின்புறத்திலிருந்து தாக்கி சட்டென்று பாய்ந்து கொன்றுவிடும். கத்துவதற்கும், கூச்சளிடுவதற்கும் கூட பலியாளிக்கு முடியாது. கண்மூடி திறப்பதற்குள் விஷயம் முடிந்துவிடும்.
புலிக்கு பயந்துபோய் கிராமத்து மக்கள் பலர் பகலில் வேலைக்கு போவதையே நிறுத்திக்கொண்டனர். அப்படியே சென்றாலும் கூட்டமாய் சென்று வந்தனர். இரவு நேரங்கள் இன்னும் நரகமாய் இருந்தது. சின்னஞ்சிறு குடிசைக்குள் சரியாக தாழிட்டுக்கொள்ள சன்னல்களும், கதவுகளும் இல்லாமல் பீதியில் தூங்கமுடியாமல் தவித்தனர்.
ஒரு ஆட்கொல்லி புலியின் அட்டகாசத்தால் பல கிராமங்கள் பசியில் வாடின.
நாளாகாக பலியானவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. இனியும் அங்கிருந்த மக்களால் பொறுக்கமுடியவில்லை. எப்படியாவது அந்த ஆட்கொல்லியை கொன்றே தீரவேண்டும் என்று இளைஞர் கூட்டம் ஒன்று புறப்பட்டது.
காடு மேடுகளில் விரைந்து செல்லக்கூடிய ஜீப் ஒன்றில் அந்த இளைஞர்கள் புறப்பட்டு சென்றனர். துப்பாக்கிகளுடன் சென்றனர். வீரத்தை துணையாக்கி சென்றனர்.
அதே சமயம் மற்றொரு கூட்டத்தினரும் அப்புலியை தேடி சென்றனர். வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் சிலர் கூடிச்சென்றனர். ஆம் இந்த ஆர்வலர்களுடன் தானும் ஒருவனாய் சேர்ந்து புலியை தேடினான் முன்னா.
அந்த “சீரியல் கில்லர்” ரை இரண்டு குழுக்கள் தேடின. தீவிரமாய் போட்டி போட்டுக்கொண்டு தேடின.
கிராமத்து மக்கள் வெறியுடன் அந்த புலியை தேடிவந்தது முன்னாவுக்கு நியாயமாக பட்டாலும் எப்படியாவது அதை அவர்களுக்கு முன்னாள் கண்டுபிடித்து காட்டில் விட்டுவிட துடித்தான் முன்னா.
வெட்டப்படாது ஓங்கி அடர்ந்து வளர்ந்து நின்ற கரும்பு தோட்டத்தில் உருமறைந்து பதுங்கி இருந்தது அப்புலி. ரயில் டிராக்குகள், ஹைவே எல்லாவற்றையும் கடந்து சென்று தம் தாக்கும் வேலையை செய்துகொண்டிருந்தது அந்த காட்டு ராணி.
தேடலும் தொடர்ந்தது. தண்ணி காட்டியது புலி. தேடுதல்களுக்கிடையே பலியானவர்களின் குடும்பம் கண்ணீர் விட்டு அழுவதை அவ்வப்போது பார்த்தான் முன்னா.
மனம் கலங்கியபோதும் அவன் தன் குறிக்கோளிலிருந்து மாறவில்லை.
அவ்வப்போது அவன் பார்க்கும் புலியின் காலடி சுவடுகளை, வேறு யாரும் பார்பதற்குமுன் அழித்து விடுவான். சில சமயங்களில் தேடுதலில் இருந்த அந்த இளைஞர் கூட்டத்தை திசைமாற்றி வேறு வழியிலும் அனுப்பி வைப்பான் முன்னா.
ஒரு மாதமாகியும் இன்னும் தேடுதல் தொடர்ந்தது. இரண்டு குழுக்களும் சோர்வடையாமல் தேடின. இடையிடையில் ஓரிரு உயிர் பலிகளும் நடந்தன. கிராம மக்களின் வெறியும் கூடியது.
அவனும் அவன் கூட்டமும் எப்படியாவது அந்த புலியை முதலில் கண்டுகொள்ளலாம் என்று முன்னாவுக்கு இன்னும் நம்பிக்கை இருந்தது.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுமார் 40,000 புலிகள் தாராளமாய் சுதந்திரமாய் இந்திய நாட்டின் காடுகளில் திரிந்துவந்தன. மக்களின் எண்ணிக்கை கூட கூட, புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. இந்திய நாட்டின் தேசிய விலங்கான புலி இனமே அழிந்துவிடும் என்ற அபாயமணி ஆங்காங்கே ஒலிக்க, பல முயர்ச்சிகளுக்குபின் மெல்ல உயர்ந்த புலிகளின் எண்ணிக்கை இன்று சுமார் 1700 ரை எட்டியுள்ளது. இன்றும் இந்தியாதான் புலிகள் எண்ணிக்கையில் உலகில் முதலிடத்தில் உள்ளது.
முன்னா போன்ற ஆர்வலர்களின் முயற்சி இதற்கு ஒரு பெரிய காரணம். என்றாலும் இன்று மனித உயிர்களை காப்பாற்றுவதும் முக்கியம் தானே?
அன்று முன்னா வழக்கம்போல் தேடுதலுக்கு புறப்பட்டான். அம்மா கதவை தாளிட்டுகொண்டதும் வாசலில் நின்றவர்களுடன் புறப்பட்டு சென்றான். “ஓ” வென்று ஒரு பெண் குரல் கதறி அழும் சத்தம் கேட்டு அந்த திசை நோக்கி ஊரே ஓடியது. முன்னாவும் ஓடினான்.
மகன் புலிக்கு பலியாகி இறந்து கிடப்பதை பார்க்க முடியாமல் கதறி அழுதாள் அந்த தாய். நெஞ்சை பிளந்தது அந்த அழுகை. அவள் பின்புறம் நின்ற ஒரு ஓலை தடுக்கின் பின்னால் கோரமாய் இறந்து படுத்து கிடந்தான் அவள் மகன். முன்னாவின் வயதுதான் இருக்கும் அவனுக்கும்.
அந்த தாயின் கதறல் முன்னாவை ஏதோ செய்தது. இறந்து கிடந்த அந்த பையனின் கோர முகமும் அந்த தாயின் அழுகை முகமும் மாறி மாறி அவன் கண் முன் வந்து சென்றன. தொடர்ந்து தேடுதலுக்கு சென்றான்.
அந்த அழுகை சத்தம் தொடர்ந்து அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. முன்னாவிற்கு தலை சுற்றியது. சுதாரித்துக்கொண்டு மனமில்லாமல் தேடுதலை தொடர்ந்தான்.
இன்று அவன் பாதையில் தெரிந்த காலடி சுவடுகளை அவன் அழிக்கவில்லை.
மறுநாள் காலை முன்னாவை தேடுதலுக்கு அழைத்து செல்ல யாரும் வரவில்லை. அந்த தாயின் குரல் மட்டும் நன்றி சொல்லுவதாய் அவன் காதில் ஒலித்தது.
எல்லாம் புரிந்தது முன்னாவுக்கு!!
Great. Kalpana, You are such a Multi-talented person !
Thanks Kalai!! Thanks for taking time to read it. Need some critics too 😉