அருளுடைமை – 243

துறவறவியல் – அருளுடைமை – குறள் 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த  
இன்னா உலகம் புகல்’

 இந்தக் குறளுக்கு தரும் பொதுவான விளக்கம்…

‘அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு இருள் நிறைந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல் இல்லை.’

இங்கு இருள் நிறைந்த உலகம் என்றால் என்ன? நரகம் என்றால் அது எங்குள்ளது என்ற கேள்விகள் எழுகின்றன.

இந்தக் குறள் துறவறவியலில் வரும் அருளுடைமை என்ற அதிகாரத்தில் வருவதால், இந்நிலையில் நம் உயிர் ஆற்றல் அனாகதத்தில் (anahata) இருக்கும். இது நம் உயிர் ஆற்றலின் மேல் நோக்கிய பயணத்தில் பாதி தூரத்தை எட்டிய நிலை. அதாவது மொத்தம் ஏழு முக்கிய சக்கரங்களில், மூன்று சக்கரங்களைத் தாண்டி நான்காவதில் இருக்கும்படியால், இந்த உலகிற்குரிய, பொருள்சார்ந்து வாழ்ந்த நிலையிலிருந்து (earthly, materialistic life), அதாவது துன்பங்கள் தரும் இருள் நிறைந்த உலகிலிருந்து அடுத்த நிலைக்கு மாற்றம்பெறும் இடைநிலை இது. நம் உயிர் ஆற்றல் இங்கு வந்துவிட்டால், நம் உள்ளத்தில் அருள் (compassion) பெருகும்.  மற்ற உயிரிடத்து கருணை பிறக்கும்.

அனாகதத்தை தொட்டுவிட்ட நிலையில் கொஞ்சம் கவனமாக, வள்ளுவர் சொல்லியிருப்பதை முறையே பின்பற்றி விட்டால், நம் உயிர் ஆற்றல் கீழ் நிலைக்கு இறங்காது (அதாவது அனாகதத்தை விட்டு மனிப்பூரகத்திற்கு இறங்காது).

இதைத்தான் வள்ளுவர் ‘அருள் நிறைந்த நெஞ்சினார்க்கு இருள் நிறைந்த துன்பம் தரும் உலகம் புக வேண்டிய அவசியம் இல்லை’ என்றார். இங்கு இருள் நிறைந்த உலகம் என்பது எங்கோ இருக்கும் நரகம் அல்ல. நம் பொருள் சார்ந்த வாழ்வில் நாம் செய்யும் செயல்களால் நாம் சேர்த்துக்கொள்ளும் கரும வினைகளையே குறிக்கும்.