அருளுடைமை – 244

திருக்குறள் – துறவறவியல் – அருளுடைமை – குறள் 244

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை’

இக்குறளுக்குத் தரும் பொதுவான விளக்கம் இது.

‘நிலைபெற்ற உயிரை காத்து அவற்றின்மேல் அருளுடையவனுக்குத் தன் உயிர் பற்றிய பயம் வருவதில்லை.’

அருளுடையவருக்கு ஏன் அவர் உயிர் பற்றிய பயம் வருவதில்லை என்ற கேள்வி எழுகிறது.

பொதுவாக அனாகதத்தில் நம் ஆற்றல் உயர்ந்து (exalted) இருந்தால் அது அன்பாகவும் (love), அருளாகவும்  (compassion) மட்டுமே வெளிப்படும். இங்கு ஆற்றல் மிகக் குறைந்து இருந்தால் (depleted) அது பயமாகவோ (fear) அல்லது வெறுப்பாகவோ (hatred) வெளிப்படும். நம் ஆற்றலின் நிலைக்கேற்ப ஏதாவது ஒரு உணர்வுதான் வெளிப்படும்.

இக்குறள் துறவறவியலில் அருளுடைமை என்ற அதிகாரத்தில் வருகின்றபடியால், இந்நிலையில் நம் ஆற்றல் அனாகதத்தை அடைந்து அங்கு உயர்நிலையில்  இருக்குமென சொல்லமுடிகிறது. அப்படியென்றால் இந்நிலையில் அன்பாகவும் அருளாகவும் மட்டுமே நம் உணர்வு வெளிப்படும். நம் உயிரைப் பற்றிய பயமோ அல்லது வேறு ஏதும் பயமோ இந்நிலையில் நமக்கு தோன்றாது.