மெய் உணர்தல் – 353

திருக்குறள்  – துறவறவியல் – மெய் உணர்தல் – குறள் 353

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து’

 இந்தக் குறளுக்கு நாம் பொதுவாக படிக்கும் விளக்கம் கீழே…

‘ஐயத்திலிருந்து (சந்தேகத்திலிருந்து) நீங்கி மெய்ப்பொருளை உணர்ந்தார்க்கு அவர்கள் இருக்கும் இந்த நில உலகைவிட (பூமியைவிட) வானுலகம் மிக அருகில் இருப்பதாகும்.’

மெய் பொருளை உணர்ந்தவர்களுக்கு இந்த பூமியைவிட வானுலகம் அருகில் இருக்கும் என்று சொல்லுவது எப்படி? எதனால் என்ற கேள்விகள் எழுகின்றன. நாம் இன்னும் இந்த பூமியில் வாழுகின்றபோது எப்படி அதைவிட வானுலகம் அருகில் இருந்துவிட முடியும்?

இந்தக் குறள் துறவறவியலில், மெய் உணர்தல் என்ற அதிகாரத்தில் வரும் குறள் என்பதால், இந்த இடத்தில் நம் உயிர் ஆற்றல் எந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று சொல்லமுடிகிறது. ஆஜ்னா சக்கரத்தில் நம் உயிர் ஆற்றல் இருக்கவேண்டும். உயிர் ஆற்றல் ஆஜ்னாவை எட்டி விட்டால், நம் மனம் முழு விழிப்புணர்வில் இருக்கும் (complete alertness). பளிங்கு (crystal) போல் ஆகிவிடும். அனைத்து ஐயப்பாடுகளும் நீங்கி, உண்மைத் தெரிந்து உயர் நிலையில் இருக்கும் நம் உயிர் ஆற்றல். சுருக்கமாகச் சொன்னால் கிட்டத்தட்ட முக்தி அடைந்துவிட்ட நிலை எனலாம். இதுவரை நீரின் தன்மையிலிருந்த (fluid state)  நம் மனம், கெட்டியாகிவிடும் (chitta – pure intelligence).

ஏழு முக்கியமான சக்கரங்களில் ஆஜ்னா சக்கரம் ஆறாவது ஆகும். பாக்கி ஐந்து சக்கரங்களை, அதாவது மூலாதாரத்திலிருந்து கொஞ்ச கொஞ்சமாக மேல்நோக்கி ஏறி ஒவ்வொரு சக்கரத்தையும் தாண்டி ஆஜ்னாவில் உயிர் ஆற்றல் இருக்கும் இந்நிலையில், அடுத்த நிலையில் சகஸ்ராரத்தை தொட்டுவிட்டால் பின் முக்தியே. வீட்டை அடைந்து விடலாம். ஆஜ்னாவில் இருக்கும் உயிர் ஆற்றலுக்கு மூலதாரத்தைவிட சஹஸ்ரார சக்கரம் தான் மிக அருகில் உள்ளது.

இந்த நிலையில், அனைத்து சந்தேகமும் நீங்கித் தெளிந்த நிலையில், வையத்தைவிட (மூலாதாரத்தை விட) வானமே (சகஸ்ராரம்) அருகில் உள்ளது. அதாவது வீட்டை மிக நெருங்கிவிட்டோம் என்பது இதன் பொருளாகும்.