ஒரு புளியமரத்தின் கதை

சென்ற ஆண்டின் கடைசியில்  நான் விறுவிறுப்பாய் படித்துமுடித்த நாவல் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’.

திருநெல்வேலியின் ‘ஏலே’ தமிழைத் தாமிரபரணியில் முக்கியெடுத்து தேன் சொட்ட எழுதிய ஒரு யதார்த்த கதை.

ஒரு ஊரின் நடுவில் அசையாமல் நிற்கும் ஒரு புளியமரத்தை வைத்தும் நம் மனதை அசையவைக்கும் ஒரு கதையைப் படைக்கமுடியும் என்பதற்கு இந்த நாவல் ஒரு எடுத்துக்காட்டு.

இக்கதையில் பெரிதாய் ஏதும் கருத்து இல்லை; தத்துவங்கள் இல்லை; மனதைப் பிசையும் சோகங்கள் இல்லை; சிரிப்பு மூட்டும் காட்சிகளும் இல்லை; ஆனால் தொடக்கம் முதல் இறுதி வரை நம்மைப் பற்றிக்கொண்டு வரும் ஏதோ ஒரு சுவாரஸ்யம். என் ஊரின் நடுவிலும் இப்படி ஒரு மரம் என் சிறுவயதில் இருந்ததாக ஞாபகம். அதைச் சுற்றி சுற்றி விளையாடியதாய் ஞாபகம். அதைப் பலமுறை கடந்துச் சென்ற ஞாபகம். இன்று அந்த மரம் அங்கு இல்லை. ஆனால் அது சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்ற பாடங்கள் பல!

‘Urbanization’ என்னும் நகரமயமாக்கலின் ஒரு கொடுஞ்செயல் தான் ஓங்கி உயர்ந்து கம்பீரமாய் நிற்கும் மரங்களை வெட்டிச் சாய்ப்பதும்.

நாம் வெட்டிச் சாய்ப்பது மரத்தைமட்டுமல்ல, அது தந்த நிழலையும், குளுமையும் மட்டுமல்ல. அதோடு சேர்ந்து வீழ்ந்து மண்ணாவது நம் இனிய நினைவுகளும், நம் கலாச்சாரமும்.

மரத்தை வெட்டுவதில் கலாச்சாரம் எப்படி பாதிக்கும் என்ற கேள்வி எழும்.

அன்று மரங்கள் வெறும் நிழல் தந்து, கனி தந்து மட்டும் நிற்கவில்லை.

மரத்தை தெய்வமாக வழிபட்டோம். பல நோய்கள் தீர்க்கும் வேப்பமரத்தை ஆரோக்கியத்தின் முக்கியம் அறிந்து, அதற்கு மஞ்சள் பூசி திலகமிட்டு இறைவடிவமாக வழிப்பட்டோம். மருத்துவ குணங்கள் கொண்ட அரசமரத்தைச் சுற்றிவந்து பிள்ளை வரம் வாங்கிக்கொண்டோம்.

மாமரத்தில் பறித்த மாங்காயில்தான் தொடங்கியது பிள்ளைகளின் பகிர்ந்துண்ணும் குணம்.

அந்த மரக் கிளைகளில் தொங்கிய தூளிகள்தான் நம் தினக்கூலிகளுடைய பிள்ளைகளின் ‘குழந்தைகள் காப்பகம்’ (day care).

மரக்கிளையில் இசைப்பாடிய குயில்பாட்டுக்கு எசப்பாட்டு பாடிய குரல்கள் அன்று பல இருந்தன. இன்று head voiceசும், chest voiceசும் சொல்லிக்கொடுக்க ஜுப்பா போட்ட ஒரு ஆசான்  தேவைப்படுகிறார்.

‘மரம்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையிலிருந்து சில வரிகள்

‘மோகத்தால புத்தி கெட்டு

இயற்கை விட்டு விலகிப்போனோம்

மெத்தப்படிச்சி மேதையாகி

மரத்த வெட்டி சாச்சிப்புட்டோம்

அன்று நீயுட்டனுக்கு ஆப்பிள்மரம்

புத்தருக்கு அரசமரம்

இன்று எங்க தேடியும் மரத்தைக் காணோம்

அதனால ஞானம் பெற

புத்தர்களும் இங்கு வரக்காணோம்

வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க

சொல்லுது நம்ம அரசாங்கம்

ஊர்முழுக்க அடுக்குமாடி கட்டிடங்கள் முறைச்சுப் பாக்க

மரம் நட இடந் தேடுற எங்களின் அவலநிலை!’

பல உண்மைகளைச் சொல்லாமல் உணர்த்திச்சென்ற ‘ஒரு புளியமரத்தின் கதை’ க்கு என் நன்றிகள்!

puliyamarathin kathai