கள்ளிக்காட்டு இதிகாசம்

கள்ளிக்காட்டு இதிகாசம் – கண்களின் ஓரம் ஒரு நீர் துளி  வரட்டுமா வேண்டாமா என்று எட்டிப்பார்க்க, கனத்த மனத்துடன் இன்று நான் படித்து முடித்த நாவல்.

புத்தகம் பிடித்திருந்த என் கைகளில் இன்னும் வீசுகிறது அந்தக் கள்ளிக்காட்டின் மண் வாசம். இந்த ஒரு வாரக்காலம் அதை படிக்கவில்லை…அதோடு வாழ்ந்ததாகவே தோன்றுகிறது. வாழ்வின் துயரம் அது. மனதை நெருடிவிட்டு போரப்போக்கில் சின்னதாய் ஒரு சோகத்தை நம்மோடே விட்டுவிட்டுச் செல்கிறது. அந்த சோகமும் ஒரு சுகம்தான்.

ஒரு கிராமத்தின் கதை… நீங்களும் நானும் கனவு காண்பதைப்போல தூரத்து மலைத்தொடர், அடிவாரத்தில் பச்சைபசேல் வயல்வெளி, எங்கேயோ வீழும் அருவி, சலசலக்கும் ஓடை, அதில் துள்ளிக்குதிக்கும் மீன்கள், நாரைக்கூட்டம், ஓங்கி நிற்கும் ஆலமரம், அதன் கிளையில் கொஞ்சும் இரு கிளிகள், தழுவிச் செல்லும் தென்றல் காற்று, ஒத்தையடிப் பாதை, அதில் ஜல் ஜல் என்னும் மாட்டுவண்டி… இதல்ல கள்ளிப்பட்டி.

கத்தாழை காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி (ஆமாம் தெரிந்தப் பாட்டுதான் ஆனா தெரியாத ஊரு). கருவேலமரம், கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, நெருஞ்சி, பிரண்டை இவையே அம்மண்ணின் பசுமை. நரி, ஓணான், அரனை, கழுகு, பருந்து, காடை, கௌதாரி…அங்கு மனிதர்களுடன்  கூட வாழும் இனங்கள் இவை.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரிவது கரும்பாரைகளும் முட்பாதைகலுமே. வானம் பார்த்த பூமி, பார்த்துப் பார்த்து சோர்ந்து வறண்ட பூமி. மழையாலும், தண்ணீராலும் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட பூமி. சுட்டெரிக்கும் வெயிலும், அதைச் சுமந்துச் செல்லும் உஷ்ணகாத்துமே அந்த ஊர்காரங்கள ஆதரிக்கும் ஒரே நட்பு.

கதையின் ஆழம் ஒருபுறம், மொழியின் அழகு மறுபுறம், இரு பக்கம் பிடித்து நடத்திச்சென்றது, நடக்கும் சோர்வுத் தெரியாமல்.

சோகத்துடன் கலந்த சுகத்தை வடித்துத்தந்த திரு வைரமுத்து அவர்களுக்கு நன்றிகள் பல.

kallikaattu idhikaasam