குற்றாலக் குறிஞ்சி

kurinji

குற்றாலக் குறிஞ்சி

கோவி. மணிசேகரன்

‘ஷட்ஜமம் என்பதும் தைவதம் என்பதும் பஞ்ச பரம்பரைக்கப்புறந்தான்’…

அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லை. பள்ளியில் இடமில்லை. கோயிலுக்குள் அனுமதி இல்லை. ஒடுக்கப்பட்ட சூழல். வறண்ட வாழ்வியல்.

தரித்திரத்தில் தள்ளப்பட்டவனுக்கு தர்பார் ராகத்தைப் பற்றி என்ன கவலை? முகாரி இசைக்கும் இடத்தில் மோகனத்திற்கு என்ன வேலை? தத்தளிப்பவனுக்கு எதற்கு ‘தத..ரி..னனா’?

ஓம்காரத்தில் பிறந்த ஓசை, ஓசையில் பிறந்த இசை… இந்த இசைக்கு மொழிகள் இல்லை. இருந்தும், பாமரனையும் சென்று சேரவேண்டுமெனில் அவனுக்கு புரியும் மொழியில் கொண்டு சேர்க்க வேண்டும்… இது இசையின் தர்மம். ‘அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல’. சரிதானே.

இதைப் புரிந்தவர்கள் சிலர் அன்றே தமிழில் பாடினார்கள்.

குறிஞ்சியும் தமிழில் பாடினாள். கதையின் நாயகி குறிஞ்சி ஒரு புலைச்சி (ஆசிரியரின் மொழியில்). ஆனால் அவள் ஒரு ‘கலைச்சி’ (என் மொழியில்).

குறிஞ்சி திருமகளின் செல்லமகள்! அறனும் அழகும் அறிவும் நிரம்பிய தமிழ்மகள்! குளிர்ந்த நிலவின் மகள்… ஆனால் அக்னிக்குப் பிறந்தவள்!

அன்று முதல் இன்றுவரை ஆங்காங்கே ஓரிரு ‘கருப்பு’ ஞானிகளும் வந்து போகிறார்கள் இசைத்துறையில். அந்த வழியில் வந்தவள் குறிஞ்சி. அரிதாய் தோன்றியவள். ஆம் குறிஞ்சி அரிதுதானே!

தண்டவாளத்தில் இரு பக்கங்களைப்போல், இசையை ஒரு பக்கமும், சாதியை மறுப்பக்கமும் வைத்து ஓடுகிறது இந்தக் குற்றாலக் குறிஞ்சிக் கதை.

படித்துக்கொண்டே போக, இக்கதையை ஆசிரியர் ஒரு பாட்டாகவே படித்திருக்கலாம் என்று தோன்றியது. இசை ஞானத்தை, ரசிக்கும் அளவில் தெவிட்டாமல் சிந்தி இதமாய் மீட்டியுள்ளார் குற்றாலக் குறிஞ்சியை. பிறகுதான் தெரிந்தது ஆசிரியர் கோவி மணிசேகரன் அவர்கள் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றவரென்று.

மேளகர்த்தா ராகங்களின் சம்பூர்ண நிலையையும், ஜன்ய ராகங்களின் பாஷாகங்களையும் கதைக்குப் பொருந்தும் வகையில் ஆங்காங்கே சொல்லியிருப்பது அவரின் இசைத் திறனுக்குச் சான்று. கதையின் போக்கில், இசை யோடுமட்டுமன்று, தமிழோடும் விளையாடுகிறது அவர் எழுத்து. எசைப்பாட்டு கேட்டதுண்டு… எசைச்சொற்கள் (என் மொழியில்) இங்கு ஏராளம்.

கதிரவன் புலர்ந்து விடியும் அதிகாலைப் பொழுதின் சுகத்தைப்போல இனிமையான பூபால ராகத்தில் தொடங்கி 33 ராகங்களைக் கொண்டு படைக்கப்பட்ட ராகமாலிகா இந்தக் குற்றாலக் குறிஞ்சி.

இசையின் மும்மூர்த்திகள் எனப்படும் தியாகையர், முத்துசுவாமி தீட்சிதர், ஷ்யாமா சாஸ்த்ரிகள் என்ற மூவரையும் தொட்டுக்கொண்டு செல்கிறது இந்தக் கதை. இதிலிருந்து, இக்கதை, 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 19ஆம் நூற்றாண்டின் முதற்பகுதிவரை நடந்திருப்பதாக யூகிக்க முடிகிறது. அது இந்திய மண் ஆங்கிலேயனின் பிடியில் இருந்த காலம். தஞ்சைப் பகுதியை மராட்டியர்கள் ஆண்ட காலம். தீண்டாமை உச்சஸ்தாயில் ஒலித்துக்கொண்டிருந்த காலம் (இன்று வரையிலும்).

தமிழில் பாட்டெழுதிய அருணாச்சல கவிராயர், மாரிமுத்து பிள்ளை போன்றவர்களை குறிப்பிட்டிருப்பதும் சிறப்பே.

சம காலத்து பிற கலைஞர்கள் பற்றியும், சரபோஜி மன்னனைக் குறித்தும், அன்று தஞ்சை, சிவகங்கை போன்ற இடங்களில் நடந்த ஆட்சி முறைகள் குறித்தும், சரஸ்வதி மஹால் குறித்தும், அன்றைய தமிழர்களின் வாழ்வியல் குறித்தும் போறபோக்கில், கதைக்கு ஊடே ஆங்காங்கே விதைத் தூவி விட்டிருப்பது, நம் மனதில் ஊறி, வேர்விட்டு, துளிர்விட்டு நினைவுகளாய் முளைத்து விரிகின்றன.

நந்தனார் சரித்திரம் எழுதிய கோபாலக்ருஷ்ண பாரதியைத் தெரிந்துக்கொள்ளும் ஒரு அறிய வாய்ப்பும் இக்கதையில்.

கதையின் சுருதி பிசகாமல் ஆரோகனமும் அவ்ரோகனமும் கொண்டு இசைக்கிறது குறிஞ்சியின் வாழ்க்கை… முடிவில் ஆரோகனத்தின் நிஷாதத்தில் (நி) அற்புதமாய் தன்னை நிறுத்திக்கொள்கிறாள் குறிஞ்சி!

குறிஞ்சியோடு சேர்த்து ஞானசுந்தரம், ராஜகாந்தி போன்ற வலுவான கதாபாத்திரங்களைக் கொண்டு மீட்டப்பட்ட இந்த ஏகாந்த வீணைக்கு சாகித்திய அகாடமி விருது மிகப்பொருத்தமே!

படித்து முடித்தபோது ‘மாயா மாளவ கௌள’ யோடு பிறந்த என் இசைப் பயணத்தின் சுவாரஸ்ய நினைவுகள் என் மனதில் குற்றால அருவியாய் பொங்கி எழ, மத்யமாவதி ராகத்தில் சுபம் படித்தேன்.

ஆசிரியருக்கு நன்றிகள்!!