சாய்வு நாற்காலி

saaivu naarkaali

சமீப காலமாய் என்னோடு மிக நெருங்கிப் பழகியத் தோழி; நான் உண்ணும்போதும் ஒய்ந்தபோதும், என்னோடு கைக்கோர்த்து உறவாடிப் பேசி கதையடித்த தோழி; தோப்பில் முஹம்மது மீரானின் நான்காவது படைப்பு; சாகித்திய அகாடமி விருது பெற்றுத் தந்த ‘சாய்வு நாற்காலி’.

நாட்டின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் ஒரு கிராமத்தை உருவாக்கி, அதில் சில சுவாரஸ்ய கதாபாத்திரங்களைப் படைத்து அவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை நாகர்கோவில் கண்ணியாகுமாரிக்கே உரிய வட்டார வழக்கில் தொகுத்து யதார்த்தத்துடன் படைத்திருப்பது ஆசிரியரின் சிறப்பு.

சாய்வு நாற்காலி ஓர் எளிய கதை. பெரிதாக, ஏன் சிருதாகக் கூட திருப்பங்களையோ, சிலிர்ப்புகளையோ, எதிர்ப்பார்ப்புகளையோ தூண்டாத மிக சாதாரணக் கதை. இஸ்லாமிய வீட்டில், நிலவுடைமை சமூகத்தின் கடைசி ஜமீன்தார், நேரம் தவறாமல் வேலை வேலைக்கு சாப்பிட்டுவிட்டு, சரியாக மாலை நான்கு மணியடித்தால் தேநீர் அருந்திவிட்டு, புகை ஊதிக் கருத்து காய்ந்துப் போன வாயுடன் சாய்வு நாற்காலியில் சாய்ந்துக்கொண்டு, வயதானாலும் இந்திரச் சுகங்களுக்கு ஏங்கவும் அதிகாரம் செய்யவும் மட்டுமே தெரிந்திருந்த ஒரு ஜமீன்தாரை மையமாக வைத்துப் பின்னப்பட்ட ‘சாய்வு நாற்காலி’ இது.

எளிய கதை என்றாலும், அக்கதையை ஏந்தி நிற்கும் தென் தமிழகத்தின் வட்டார மொழி அழகாய் மிளிர்கிறது. தூண்டில் போட்டு நம்மைக் கதைக்குள் ஈர்த்துச் செல்கிறது அந்த நடை.

படித்துக்கொண்டே போக, மலையாள வாடை பூசப்பட்ட அந்த வட்டார மொழி மெல்ல மெல்ல நம் காதோரமாய் பாடிவிட்டு போவதாய் ஓர் உணர்வு. அழகிய அனுபவம் அது.

ஓர் மொழியாம், தமிழ் பேசும் தமிழ் நாட்டுக்குள் எத்தனை எத்தனை வட்டார வழக்குகள். அத்தனையும் அழகுகள். தமிழ்த்தாய் ஈன்ற பிள்ளைகள்.

சென்னைத் தமிழால் குஜால் ஆன நான், நாட்டின் கடைக்கோடி வட்டார மொழியில் சற்று மயங்கித்தான் போனேன்.

பெண்ணை அடித்து நெறிப்படுத்தும் அதபு பிரம்புடன், சாய்வு நாற்காலியில் சவமாய் உயிர் வாழும் முஸ்தபாக்கன்னியின்மேல் வெறித்தனமாய்க் கோபம் ஒருபுறமும், மொழியின்மேல் அலைமோதும் காதல் மறுபுறமும், முன்னும் பின்னுமாய், உணர்வுகள் மாறி மாறி வந்துச் செல்ல, இன்று சாய்வு நாற்காலி முற்றிற்று!

அடுத்து, அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராதப் போராட்டத்தை முன் வைக்கும் சுஜாத்தாவின் கொலையுதிர் காலத்தை நோக்கி!