கல்மரம்

ஒரு பக்கம் மிடில் கிளாஸ் சமூகம். வாழ்நாள் முழுதும் ஓடி ஓடிப் பொருள் சேர்த்து, பார்த்து பார்த்து கட்டிக்கொள்ளும் வீடு. கனவு மெய்ப்பட்டதில் பெரும் மகிழ்ச்சி. வீட்டுக்குள் பொருள் சேர்க்க தயாராகும் அடுத்த முயற்சி.

மறு பக்கம், நம் கனவு மெய்ப்பட, நம் கைவசம் ஆவதை விரைவில் நம்மிடம் கொண்டுசேர்க்கும், அதாவது நம் வீடுகளை கட்டித்தரும் கட்டிடத் தொழிலாளர் கூட்டம் … வானமே கூரையாய் பூமியே வீடாய் வாழும் அந்த சபிக்கப்பட்ட சமூகம்.

தாழ்த்தப்பட்ட இந்த தொழிலாளர் சமூகத்தைத் தொட்டு செல்லும் கதைதான் ‘கல்மரம்’.

சென்னை செந்தமிழ் அழகாய் ஆதிக்கம் செய்ய, கட்டிடத் தொழிலாளர்களையும் அவர்கள் வாழ்வியலையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது ‘கல்மரம்’.

அன்றாடம் இவர்களைக் கடக்காமல் போவதில்லை நம் வாழ்க்கை. என்றாலும், காரணம் தெரியாமலே நாம் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த ‘rat race’ சில் அவர்கள் நிலையை யோசிக்கக்கூட நமக்கு நேரம் இருக்கிறதா என்ன?

நம் ஓட்டத்தை சற்றே நிறுத்தி, இந்த சமூகத்தை நெருங்கி, அவர்கள் வாழ்க்கையைக் கொஞ்சம் எட்டிப் பார்க்க வைக்கிறது ‘கல்மரம்’.

சுவாரஸ்யமாக தொடங்கி விறுவிறுப்பாக நகரும் ‘கல்மரம்’, போக போக வேகம் குறைந்து ஓட்டத்தில் சற்று தொய்வு ஏற்படுவது கொஞ்சம் ஏமாற்றமே.

வித்தயாசமான கதை இல்லை என்றாலும் கட்டிடத் தொழிலாளர்களின் யதார்த்த வாழ்வியலை முன் நிறுத்தி, விழிப்புணர்வாக அவர்களின் சங்கம் பற்றியும் பேசியிருப்பதனால் சாகித்ய அகாடமி விருது தகுமே என்று தோன்றுகிறது.

திருமதி திலகவதி IPS அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!!

இந்தியக் கட்டிடக்கலை, குறிப்பாக திராவிடக் கட்டிடக்கலை பண்டைக் காலங்களில் பெரிதும் வியக்கும்படியே இருந்திருக்கிறது. மாமல்லபுரத்தில் ஒரேக் கல்லில் செதுக்கப்பட்ட பல்லவ சிலைகளும், சோழ நாட்டின் கர்வமாக இன்றும் கம்பீரமாய் நிற்கும் தஞ்சை பெரியக் கோவிலுமே இதற்குச் சான்றெனலாம்.

ஒரு பானை சோற்றுக்கு இரண்டு பதமாகி விட்டது.

அறிய பெரிய கட்டிடங்களைப் பார்க்கும்போதெல்லாம் அதை வியக்கும் நம் மனித இனம். ஆனால் அதைக் கட்டிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்? இரவும் பகலும் பாடுபட்டவர்கள்? வரலாற்றுக்கு அவர்களைப் பற்றி கவலை இல்லை, தேவையும் இல்லை.

அவர்கள் பாடும் உழைப்பும் தண்ணீரில் கரைந்துவிட்ட உப்பைப்போல அவர்கள் கண்ணீரோடே கலந்து விடுகிறது.

அன்றும் இன்றும் அதே நிலைமைதான்.

மாநகரங்களில் நாம் அண்ணார்ந்து பார்க்க, எழுப்பப்படும் அடுக்கு மாடி கட்டிடங்கள், சில பல மாதங்களில் வெற்றிடங்களில் ஓங்கி நின்று சிரிக்கும் பளிங்கு கண்ணாடி மாளிகைகள், இப்படி அலுவலகங்களும் குடியிருப்புகளும் பெருகிக் கொண்டேதான் வருகின்றன. அதை கட்டித்தரும் தொழிலாளர்களின் நிலைமை என்னவோ சிறிதாகக் கூட உசந்துவிட்டதா என்று தெரியவில்லை.

கட்டிடத் தொழிலாளர்கள் பெரும்பாலும் நம் கிராமத்து விவசாயிகளே என்பது ஒரு வலிக்கும் உண்மை. விவசாயத்தில் இழப்படைந்து, பிழைப்பைத் தேடி நகரத்திற்கு வருவோர் போவது இங்குதான். பச்சை மரங்களை வளர்த்த கைகள் இன்று கல் மரங்களை கட்டும் அவலம்!

நம் ஊர்களில் இன்றும் ரோடு போடுபவனின்  கால்களில்  தார் சூட்டைத் தாங்குவது வண்டியின் ட்யூபுகள் (tubes) தானே!

எத்தனை கர்பிணிப் பெண்கள்? கைக்குழந்தைகளோடு எத்தனை தாய்மார்கள்? சிறியவர்களும், முதியவர்களும் தலையில் பாண்டு சுமந்துக்கொண்டும், செங்கல் ஏந்திக்கொண்டும் வெற்றுக்கால்களுடன் ஜல்லியிலும் சிமென்ட்டிலும் நடந்து, பிடியில்லா மாடிப் படிகளில் ஏறி வேலை செய்வது நமக்கு பரீட்சியப்பட்ட காட்சிகளே!

இந்தக் கூட்டத்திற்கு மழையிலும் பாடு வெய்யிலிலும் பாடு. கால்களில் சேற்றுப்புண்களுடன் ஆணி ஏறினாலும் கற்கள் குத்தினாலும் நிற்காமல் தொடரும், தொடரவேண்டும் இவர்கள் வேலை.

இவர்கள் உள்ளங்களில் சத்தமின்றி ஒலிக்கும் உள் அலறலின் சக்தியில் தான் ஒவ்வொரு கட்டிடமும் கல்மரமாய் எழுந்து நிற்கின்றது போலும்.

இந்தக் கதையின் இறுதியில் என் மனதில் நின்றது எழுத்தோ அல்லது கதையோ அல்ல… கட்டிடத் தொழிலாளர்களே!

உலகில் உள்ள அத்தனை தொழிலாளர்களுக்கும், அவர்களின் உழைப்புக்கும், சிந்தும் வேர்வைக்கும் என் கை கூப்பி வணக்கங்கள்.

உங்களின் வாழ்வின் தரம் விரைவில் சற்றே உயருமேயானால் அதுவே இப்புவியின் பேரானந்தம்!!

kalmaram