சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!

சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

சமீபத்தில் தன் 375ஆவது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய எனதருமை சென்னைக்கு என் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில், கடல் அன்னையின் அரவணைப்பில், அலைகள் கொஞ்சி விளையாடும் ஒரு அழகிய நகரம். அன்று கடலோரம், அமைதியாய் நின்ற மதராசப்பட்டினம் என்ற ஒரு சிறிய ஊர், இன்று ஓங்கி வளர்ந்து பிரமாண்ட சென்னையாக நம் முன் நிற்கிறது. காலத்தின் எல்லா மாற்றங்களையும் இரு கைகள் நீட்டி இனிதே வாங்கிக்கொண்டு இன்று 4.5 மில்லியன் மக்களைத் தாங்கி நிற்கிறது.

எல்லா வித கலாச்சார நறுமணங்களையும் கொண்ட, வந்தாரை வாழவைக்கும் நகரம் இதல்லவா?

இன்று சென்னை IT பார்க்குகளாலும், மெட்ரோ ரயில்களாலும், Express Avenue, Phoenix, City Center போன்ற பிரமாண்ட மால்களாலும் அடையாளம் காட்டப்பட்டாலும், அதன் வேர்கள் அதைத் தாங்கி நிற்கும் வலுவான வரலாறு தான்.

சென்னை என் ஊர் என்பதனால் அது சிறந்தது என்பதையும் தாண்டி, இதன் சுவாரஸ்யமான வரலாறு பிரமிக்க வைக்கின்றது.

1522 ஆம் ஆண்டு போர்ச்சுக மக்கள் (Portuguese) கடல் வழியாக மதராசப்பட்டினம் அருகே ஒரு ஊரில் இறங்கி, சாந்தோம் (San Thome in memory of St. Thomas) என்ற கிறிஸ்துவ தேவாலயத்தை கட்டி அந்த ஊரில் குடியேறினார்கள்.

பிறகு, 1639 ஆம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனியின் பிரான்சிஸ் டே (Francis Day) என்பவர், அந்தப் பகுதியை ஆண்ட நாயக்கர்களிடமிரிந்து கோரமண்டல கரையோரத்தில் ஒரு சிறிய நிலத்தை வாங்கினார். அங்கு போர்ட் செயின்ட் ஜார்ஜ் (Fort St. George) என்ற ஒரு கோட்டையை கட்டினார்கள் கிழக்கு இந்திய கம்பெனியினர். தங்கள் வணிக பொருட்களையும், ஆயுதங்களையும் வைப்பதற்காக கட்டப்பட்ட கோட்டைதான் அது. முதலில் அங்கு ஆங்கிலேயர்கள் வந்திறங்க, பிறகு அவர்களுக்கு சேவை செய்ய வந்த மக்கள் அங்கு குடியேறினார்கள். இப்படியாக இந்த சிறிய ஊர் வளர்ந்தது.

சென்னையில் இன்றுள்ள ஊர்களுக்கும்  தெருக்களின் பெயர்களுக்கும் வரலாறு உண்டு. சேவகர் சையத் கான், ஆர்காட் நவாபிடமிரிந்து பெற்ற சையத் கான் பேட்டை தான் இன்று சைதாபேட் ஆனது. தறி நெய்யுமிடமான சின்ன தறி பேட்டைதான் இன்று சிந்தாதரிப்பேட் ஆனது. அல்லி மலர்கள் அதிகம் கொண்ட இடம் திருவல்லிக்கேணி ஆனது. குதிரைகளை பராமரிக்குமிடம் கோடாபாக் எனப்பட்டு பிறகு கோடம்பாக்கம் ஆனது (உருதுவில் குதிரைக்கு ghora என்பார்கள்). பல்லவபுரம் பல்லாவரமானது.

ஒரே ஒரு மொழியாம் ஆங்கிலம் மட்டுமே அறிந்த ஆங்கிலேயர்களுக்கு அன்று மொழி பெயர்க்க துபாஷிகள் (இரண்டு மொழிகள் தெரிந்தவர்கள்) இருந்தார்கள். சென்னையில் வாழ்ந்த துபாஷிகளின் பெயர்தான் பல தெருக்களுக்கு சூடபட்டிருக்கிறது. இன்று இருக்கும் தம்பு செட்டி தெரு, லிங்கு செட்டி தெருக்களுக்கு இப்படி தான் பெயர்கள் வந்தன.

‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன்வந்து பாயுது காதினிலே’ என்று பாரதி பாடியதுபோல், சென்னையைவிட்டு வெகுதூரம் தள்ளி வாழ்ந்தாலும், சென்னை என்றதும் ஏனோ ஒரு குதூகலம், ஒரு துள்ளல் மனதிற்குள் வரத்தான் செய்கிறது.

சென்னை என்றதும், மெரினா கடற்கரைக்கு அடுத்து, நம் கண் முன் வருவது சென்னையின் பிரமாண்ட பழைய கட்டிடங்கள் தான். 150 வருடங்களையும் தாண்டி அமைதியாய் கம்பீரமாய் தன் வரலாற்றை சொல்லாமல் சொல்லிக்கொண்டு நிற்கும் இந்த கட்டிடங்கள். எத்தனை முறை இவற்றை கடந்து சென்றிருப்போம் நாம்.

சென்ட்ரல் ரயில் நிலையம், எக்மோர் ரயில் நிலையம், உயர் நீதி மன்றம், ஜெனரல் போஸ்ட் ஆபீஸ் (GPO), ரிப்பன் பில்டிங், கன்னமேரா நூலகம், பிரெசிடென்சி கல்லூரி, மெட்ராஸ் மருத்துவ கல்லூரி, மெட்ராஸ் பல்கலைக்கழகம், ஐஸ் ஹவுஸ் (இன்று விவேகானந்தர் இல்லம்) இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

கட்டிடங்கள் மட்டுமல்ல, சென்னையின் கபாலீஸ்வரர் கோயில் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. பார்த்தசாரதி கோயில், கடலோர அஷ்டலக்ஷ்மி கோயில், வடபழனி முருகன் கோயில் என்று புகழ்வாயிந்த ஆலயங்களும் ஏராளம்.

திரைத்துறையின் வளர்ச்சிக்கும் பெரிதளவு சென்னை கைக்கொடுத்திருக்கிறது. இன்றும், தென்னக திரைப்படவுலகின் மையம் சென்னை எனலாம்.

இந்தியாவிலேயே, ஏன், உலகிலேயே உள்ள முக்கியமான விஷயங்கள் பலவற்றிற்கு சென்னை முதலிடம் வகிப்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது.

உலகில், முதல் ஆவணக்காப்பகம் சென்னையில் 1672 நிறுவப்பட்டது. இந்தியாவின் முதல் கண் மருத்துவமனை (உலகிலேயே இரண்டாவது) சென்னை எக்மோரில் உள்ள கண் ஆஸ்பத்திரி தான்.

இந்தியாவின் முதல் வங்கி, சென்னையில் தொடங்கப்பட்ட மெட்ராஸ் பேங்க். G.H. என்று சொல்லப்படும் ஜெனரல் ஆஸ்பத்திரி, 1755 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது.

உலகிலுள்ள பல பெரிய நகரங்களுக்கு முன்பே சென்னையில் ட்ராம் (tram) ஓட தொடங்கிவிட்டது. 1925 ஆம் ஆண்டு பேருந்துகள் ஓடத் தொடங்கின.

சென்னை மெரினா கடற்கரை, உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை.

மெரினா கடற்கரை, அங்கு விற்கும் சுண்டல், காந்தி சிலை, கண்ணகி சிலை, உழைப்பாளர்கள் சிலை, அண்ணா சமாதி, லைட் ஹவுஸ், மெட்ராஸ் சிதம்பரம் மைதானம், அங்கு கிரிக்கெட் நடக்கும் காலம், தீவுத் திடலில் நடக்கும் பொருட்காட்சி, ரயில்கள், சுரங்கப்பாதைகள், ஜெமினி பாலம், ஆட்டோக்களின் சத்தம், T.V டவர், மெட்ராஸ் பாஷை இதெல்லாம் சென்னைக்கும் சென்னை வாசிகளுக்கும் மட்டுமே இருக்கும் சிறப்பல்லவா?

இன்றும், பொழைப்பைத் தேடி, சென்னை வாழவைக்கும் என்று நம்பி தினமும் மக்கள் கூட்டம் வந்து இறங்கிக்கொண்டேதான் இருக்கிறது. அனைவரையும் தாங்கிக்கொள்ள நகரமும் விரிந்து வளர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது.

சென்னையின் சிறப்பைப்பற்றி பேசிவிட்டு, தனித்துவம் வாய்ந்த சென்னை மொழியைப் பற்றி பேசாமல் இருக்கமுடியாது. இருக்கவும் கூடாதல்லவா?

வந்தாரை வாழவைத்த சென்னை, ஒரு தாயைப் போல, வந்தவர்களை மட்டுமல்ல, அவர்களின் மொழியையும் தத்தெடுத்துக்கொண்டது. சென்னை மொழியில் வரும் பல சொற்கள் இங்கு பிழைக்க வந்தவர்களின் மொழிகளிலிருந்து வந்தவைதான்.

பேமானி என்ற சொல் உருது மொழியில் பே இமான் என்பதிலிருந்து வந்தது. இமான் என்றால் நாணயமானவன் என்றும் பே இமான் என்பது நாணயம் இல்லாதவன் என்றும் பொருள் என்கிறார்கள்.

சமஸ்கிருதத்தில் உள்ள கஸ்மலம் (சுத்தமில்லாத) என்ற சொல்தான் கஸ்மாலம் என்று சொல்லப்படுகிறதாம்.

உருதுவில் சொல்லும் பேஜார் தான் பேஜாரு என்றானது.

கலீஜ் என்பது உருதுவில் அழுக்கு என்றாகும்.

நைனா, டப்பு என்பவையெல்லாம் தெலுங்கு மொழியிலிருந்து வந்ததை புரிந்துக்கொள்ள முடிகிறதல்லவா?

இப்படி பல மொழிகளின் கலவைதான் நம்ம மெட்ராஸ் மொழி.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி ‘மெட்ராஸ் டே (Madras Day)’ என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இது கொண்டாடப்படவேண்டிய ஒன்றுதானே?

அன்று கூவத்திலிருந்து குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு போனார்களாம். கூவ ஆற்றில் படகில் உல்லாச பயணமும் போனார்களாம். இன்று?

strong>