உழுவார் உலகத்தார்க்கு..?

farmerpic

நகரங்களின் சாலை ஓரங்களில் தர்பார் நடத்தும் பிளாட்பாரம் ராஜாக்கள்; கிழிந்த ரவிக்கையை சேலைத் தலைப்பில் மறைத்துக்கொள்ளும் மகாராணிகள்; கையேந்தி யாசிக்கும் புழிதிக் குழந்தைகள்; யார் இவர்கள் என அருகில் சென்று அறிய முயன்றேன்; கண்கள் கலங்கி வாயடைத்து நின்றேன்.

அன்றொரு நாள் வரை என் பசிக்கு உணவளித்த என் விவசாயி குடும்பம் இது. இன்று பசியின் பிடியில் நிர்கதியாய் நடுத்தெருவில்!

நகரங்களின் தெருக்களுக்கு வந்தேறிகளாய் சில கூட்டம். எலிக்கறி போதும் என்று உயிர்விடும் சில கூட்டம். பாவப் பட்ட ஜென்மம் இந்த பாழாய்ப்போன விவசாயக் கூட்டம்.

‘சோறு போடும் விவசாயிக்கு பசி பிணித் தொல்ல

அவன் முடிவு அந்தப் பாழாப்போன தற்கொலையில’

ஆண்டிற்கு சுமார் ஐந்தாயிரம் விவசாயிகள் தற்கொலை. 2004 ஆம் ஆண்டு மட்டும் பதினெட்டாயிரம் விவசாயிகள் தற்கொலை. நமக்கு அன்னமிட்ட வர்கத்துக்கு இன்று வாய்க்கரிசிதான் மிச்சம்.

‘ஏர் பிடித்து உழவன் நம் வயிற்றுக்குத் தரும் சோறு!

நாம் தரும் பரிசு அவன் கழுத்துக்கு பாசக்கயிறு!

மண்ணை மலடாக்கிவிட்டு இன்று விண்ணை வளைக்க விவாதம் நடத்தும் நாம்; மெத்த படித்து மேதைகள் ஆனோம். அறமிழந்தோம்!

மணல் சுரண்டப்பட்டு, நீர் நிலைகள் அழிக்கப்பட்டு, வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, வாழ்வின் விளிம்பில் விவசாயி.. சினிமா ஹீரோக்களின் கட் அவுட்டுகளுக்ககோ பால் அபிஷேகம் அமோகம். என் நாடு சிறந்தது என்று மார்தட்டிக்கொள்ளும் நாம்!!

விளை நிலமெல்லாம் இன்று விலை நிலமாக்கினோம்! அன்று சிரித்துக்கொண்டிருந்த பச்சிளம் பயிர்கள்; இன்று அதே இடத்தில் கல்மரங்கள் (கட்டிடங்கள்) நின்று இளிக்கின்றன நமைப்பார்த்து.

 மகிமை அறிந்து உழவுக்கு ஒரு அதிகாரமே விட்டுச் சென்றான் நம் பாட்டன்.

 ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்’ – இதுதானே ஞாயமும் கூட.

பள்ளிகளில் 2 ‘மார்க்’ கேள்விகளுக்கு பதிலாக மட்டுமே இவை இருந்துவிட்டதின் பரிதாபம் இது.

 ‘கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு

பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்

தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?

ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?’ – இது கண்ணதாசன்.

விடுமுறைக்கு விண்ணுக்குச் செல்ல தயாராகிறோம் நாம்.. மண்ணோடு மன்றாடிக்கொண்டிருக்கிறான் நம் உழவன்!

கூன் முதுகும், ஓடிங்கிய வயிறும், சுருங்கிய தோலுமாய் தொலைந்த சிரிப்பைத் தேடும் நம் விவசாயி.. அவன் முகத்தில் வரும் முதல் சிரிப்பு.. அன்றே நாம் கொண்டாடும் உண்மையான உழவர் தினம்!